ராஜா கிருஷ்ணமூர்த்தி டூ சுகாஷ் சுப்ரமணியம்.. அமெரிக்க தேர்தலில் வென்ற 6 இந்திய வம்சாவளிகள்! லிஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வென்றுள்ளனர். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 9 இந்தியர்கள் போட்டியிட்ட நிலையில் தற்போது 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஒருவர் முன்னிலை வகித்து வருகிறார். அவர்கள் யார்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை வீழ்த்தி குடியரசு கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்த தேர்தல் முடிவு என்பது ஜனநாயக கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் தோல்வியடைவார் என்பதால் வேட்பாளராக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டார். ஆனால் அவரும் டொனால்ட் டிரம்ப்பிடம் தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் தான் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 9 பேர் போட்டியிட்ட நிலையில் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஒருவர் முன்னிலையில் உள்ளார். அதன்படி விர்ஜினியாவில் 10வது மாவட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர் (எம்பி) பொறுப்புக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட சுகாஷ் சுப்ரமணியம் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்திய வம்சாவளியாவார். இவர் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
சுகாஷ் சுப்ரமணியம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியின் மைக் கிளான்சி என்பவரை வீழ்த்தி வாகை சூடியுள்ளார். அடிப்படையில் வழக்கறிஞரான சுகாஷ் சுப்பிரமணியம் இதற்கு முன்பு பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையின் அட்வைசராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அதேபோல் கலிபோர்னியாவின் 6வது மாவட்டத்தில் அமி பெரா வெற்றி பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபையின் மிக மூத்த இந்தியா வம்சாவளி உறுப்பினர் ஆவார். இல்லினாய்ஸ் 8 வது மாவட்டத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். கலிபோர்னியா 17வது மாவட்டத்தில் மீண்டும் ரோ கானா வெற்றி பெற்றுள்ளார். வாஷிங்டன் 7 வது மாவட்டத்தில் மீண்டும் பிரமில்லா ஜெயபால் வெற்றி பெற்றுள்ளார்.
மிசிகன் 13வது மாவட்டத்தில் மீண்டும் ஸ்ரீ தானிதார் வெற்றி பெற்றுள்ளார். இப்படியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேவேளையில் அரிசோனா 1வது மாவட்டத்தில் டாக்டர் அமிஷ் ஷா முன்னிலை வகித்து வருகிறார். தற்போது அமெரிக்கா பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் இடம்பெற்றிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் 6 பேர் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications