“இனி இவர் தான் ஜேம்ஸ் பாண்ட் 007”.. புதிய ஜேம்ஸ் பாண்டாக ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் தேர்வு!
வாஷிங்டன்: அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், புகழ்பெற்ற பிரிட்டிஷ் உளவாளி 'ஜேம்ஸ் பாண்ட்' கதாபாத்திரத்தில் நடிக்கும் ஏழாவது நடிகர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. ரோஜர் மூர், சீன் கேனரி, திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் என பல நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபல நடிகர் டேனியல் கிரெய்க் தொடர்ந்து 5 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார். பாண்ட் பட வரிசையின் 25-வது படமான 'நோ டைம் டு டை', கடந்த 2021 ஆம் ஆண்டு டேனியல் கிரெய்க்கின் கடைசி பாண்ட் படமாக வெளியானது. இனிமேல் பாண்ட் கேரக்டரில் நடிக்கப் போவதில்லை என்று டேனியல் கிரெய்க் அறிவித்தார்.
இதனால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. நடிகர்கள் இட்ரிஸ் எல்பா, டாம் ஹாலண்ட், ஆரோன் டெய்லர்- ஜான்சன், ஜேக்கப் எலார், கேலம் டர்னர் என பலர் அடுத்து பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான ரேஸில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப் படத்தை 'டூன்' வரிசைப் படங்களை இயக்கிய டெனிஸ் வில்லென்யூவ் இயக்க இருக்கிறார். பீக்கி பிளைண்டர்ஸ்' தொடரின் எழுத்தாளரான ஸ்டீவன் நைட் திரைக்கதையை எழுதுகிறார். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கான தேர்வுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், 'தி பேட்மேன்' மற்றும் 'ஒடிஸி' படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன், அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்க அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஏழாவது நடிகர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
வில்லென்யூவ் மற்றும் பேட்டின்சன் சமீபத்தில் 'டூன்: பார்ட் த்ரீ' படத்தில் இணைந்து பணியாற்றினர். இதுகுறித்து இயக்குநர் வில்லென்யூவ், "எங்கள் புதிய ஜேம்ஸ் பாண்டாக ராபர்ட் பேட்டின்சனை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம் 007-இன் காலத்தால் அழியாத ஆன்மா உள்ளது, அவர் முற்றிலும் புதிய ஒரு உத்வேகத்துடன் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
