"99.7% கன்பார்ம்.." ஏலியன் இருப்பது உண்மைதான்.. ஆதாரம் கண்டுபிடிப்பு! அசத்தும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து நாம் படங்களில் பார்த்திருப்போம்.. கதைகளில் கேட்டிருப்போம். ஆனால், ஏலியன்களின் இருப்பை உறுதி செய்யும் விதமாக ஆய்வாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். இதன் மூலம் ஏலியன்கள் என்பது வெறும் கதை இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பூமிக்கு வெளியே நிச்சயம் எதாவது ஒரு கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பது குறித்து ஆய்வாளர்கள் பல காலமாகவே ஆய்வு செய்து வருகிறார்கள். முதலில் சூரியக் குடும்பத்திற்குள் உள்ள கிரகங்கள் மட்டுமின்றி சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்கள் குறித்தும் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே ஏலியன் இருப்பை உறுதி செய்யும் வகையில் முக்கியமான கண்டுபிடிப்பு நடந்துள்ளது.

ஏலியன் இருப்பு
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தும் ஆய்வாளர்கள், நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உயிர்கள், அதாவது ஏலியன்களின் இருப்பை உறுதி செய்யும் வகையில் வலிமையான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு வேற்று கிரகத்தின் வளிமண்டலத்தில் பூமியில் உயிரியல் செயல்முறைகளால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் வாயுக்களின் வேதியியல் பண்புகளைக் கண்டறிந்துள்ளனர்.
K2-18 b எனப் பெயரிடப்பட்ட கிரகத்தை ஆய்வு செய்து வந்துள்ளனர். அப்போது டைமெத்தில் சல்பைடு அல்லது DMS, மற்றும் டைமெத்தில் டைசல்பைடு அல்லது DMDS ஆகிய வாயுக்களின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த வாயுக்களைப் பூமியில் வாழும் உயிரினங்களான ஆல்கா போன்ற நுண்ணுயிர் உயிரினங்களால் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்தக் கிரகம் நுண்ணுயிர் உயிர்களால் நிறைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன
அதேநேரம் தங்கள் கண்டுபிடிப்பை வைத்து ஏலியன்கள் உள்ளன என்று அறிவிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய ஆய்வாளர்கள். ஒரு சாத்தியமான உயிரியல் சான்று, அதாவது உயிரியல் செயல்முறை நடப்பதற்கான ஆதாரத்தை மட்டுமே கண்டுபிடித்துள்ளதாகவும் இதை நாம் எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவுகள் ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.
பயோ சிக்னேச்சர்
இது தொடர்பாக முதன்மை ஆய்வாளரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தின் வானியற்பியல் ஆய்வாளருமான நிக்கு மதுசூதன் கூறுகையில், "பூமிக்கு வெளியே ஏலியன்கள் ஒரு கிரகத்தில் வாழலாம் என்பதற்கான முக்கியமான ஆதாரம் இது. சூரிய மண்டலத்திற்கு வெளியே எதாவது உயிர்கள் உள்ளதா என நாம் தேடி வரும் நிலையில், அதில் குறிப்பிடத்தக்கச் சாதனையாகவே இதைப் பார்க்க வேண்டும். தற்போது நமது கிரகத்தில் உள்ள பயோ சிக்னேச்சர் உடன் கிரகங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பதை நிரூபித்துள்ளோம். இதன் மூலம் வானியல் உயிரியல் ஆய்வில் நாம் புதிய சகாப்தத்தில் நுழைகிறோம்.
சூரியக் குடும்பத்தில் வேறு எந்தக் கிரகத்தில் நாம் உயிர் வாழும் சூழல் இருக்கிறது என்பதைத் தேடிப் பல முயற்சிகள் நடந்து வருகிறது. செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட கிரகங்கள் உயிர்களுக்கு உகந்ததாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகிறது. நாங்கள் சூரியக் குடும்பத்திற்கு வெளியே இந்த ஆய்வு செய்தோம்." என்றார்.

K2-18 b கிரகம்
பயோ சிக்னேச்சரை கண்டுபிடிக்கப்பட்ட K2-18 b கிரகம் பூமியை விட 8.6 மடங்கு பெரியது. மேலும், நமது கிரகத்தை விட 2.6 மடங்கு பெரிய விட்டம் கொண்டதாகும். மேலும், இது வாழக்கூடிய மண்டலத்தில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அதென்ன வாழக்கூடிய மண்டலம் என நீங்கள் கேட்கலாம்.
பொதுவாக அனைத்துக் கிரகங்களும் சூரியனை போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும். சூரியனுக்கு மிக அருகே இருந்தால் அந்தக் கிரகத்தில் நீர் இருக்காது. சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாகிவிடும். எனவே, கணிசமான தொலைவில் தான் இருக்க வேண்டும். நீர் என்பது மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதால் நீர் ஆவியாகாமல் இருக்கக்கூடிய தொலைவில் இருக்கும் கிரகங்களையே வாழக்கூடிய மண்டலத்தில் இருக்கும் கிரகம் என்போம். இந்த கே2-18 கிரகம் அதன் நட்சத்திரத்தில் இருந்து போதுமான தொலைவில் இருக்கிறது என்பதையே ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எவ்வளவு தொலைவு
மேலும், இந்தக் கிரகம் பூமியிலிருந்து சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள லியோ விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளதாம். ஒரு ஒளி ஆண்டு என்பது ஒரு வருடத்தில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது நாம் அடையும் தூரம். அதாவது 9.5 டிரில்லியன் கிமீ. அதாவது நாம் இந்த வேகத்தில் பயணித்தால் 124 ஆண்டுகளில் K2-18 b கிரகத்தை எட்டிவிடுவோம் என்பதே இதன் பொருளாகும்.

ஏன் முக்கியம்
டிஎம்எஸ் மற்றும் டிஎம்டிஎஸ் ஆகிய இரண்டு வாயுக்களும் ஒரே கெமிக்கல் குடும்பத்தைச் சேர்ந்தது. இவை உயிரினங்கள் வாழும் ஆதாரத்தைக் குறிக்கும் முக்கியமான பயோசிக்னேச்சர்களாக கருதப்படுகிறது.. இந்த இரண்டும் அந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பது 99.7% உறுதி என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாயுக்கள் 10 லட்சத்திற்கு 10 என்ற ரேஞ்சில் வளிமண்டலத்தில் கண்டறியப்படுகிறதாம். ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இது பூமியின் வளிமண்டல ரேஞ்சை விட பல மடங்கு அதிகமாகும். உயிரியல் செயல்பாடு இல்லாமல் இந்தளவுக்கு இந்த இரு வாயுக்களும் உருவாக வாய்ப்பே இல்லை என்பதே ஆய்வாளர்களின் பிரதான வாதமாக இருக்கிறது.
சில ஆண்டுகளில் உறுதியான பதில் கிடைக்கும்
ஆய்வாளர் மதுசூதன் மேலும் கூறுகையில், "இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மனிதர்கள் மட்டும் தனியாக இருக்கிறோமா என்ற கேள்விக்கு விடையைக் கண்டுபிடிக்கப் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதக் குலம் முயன்று வருகிறது. இதற்கான பதிலை நாம் நெருங்கிவிட்டோம். இன்னும் சில ஆண்டுகளில் ஏலினயன்களின் வாழ்க்கை குறித்து உறுதியாகக் கூறிவிடலாம்.
அதேநேரம் நாம் இந்த ஆய்வைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். முதலில் இந்தக் கண்டுபிடிப்பை உறுதி செய்ய இரண்டு முதல் மூன்று முறை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மூலம் ஆய்வைத் திரும்பத் திரும்ப நடத்த வேண்டும். அப்போது தான் கண்டுபிடிப்பை உறுதி செய்ய முடியும்.
அடுத்து K2-18 b போன்ற ஒரு கிரக வளிமண்டலத்தில் DMS அல்லது DMDSஐ உருவாக்க உயிரியல் செயல்முறைகளைத் தவிர்த்து வேறு வழி இருக்கிறதா (அதாவது உயிர்கள் இல்லாமல் இந்த வாயு உற்பத்தியாகுமா) என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடுதல் ஆய்வுகள் தேவை. எங்கள் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது என்றாலும் கூட பல சோதனைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டி இருக்கிறது. அப்போது தான் நமக்குத் தெளிவான பதில்கள் கிடைக்கும்" என்றார்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications