Pakistan: இந்தியா - பாகிஸ்தான் சண்டையை அவர்தான் நிறுத்தினார்.. டிரம்பிற்கு ஷெபாஸ் ஷெரீப் சப்போர்ட்
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் மோதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் நிறுத்தினார் எனவும் டிரம்ப் தலையிடாவிட்டால் இந்த பிரச்சினை எங்கு போய் முடியும் என்று யாருக்கும் தெரியாது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். மேலும், டிரம்பிற்கு நோபல் பரிசு கொடுக்க வெண்டும் என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து சண்டை நிறுத்தம் ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை தெரிவித்துள்ளார். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது.

இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன்களை கொண்டு தாக்கியது. இந்தியாவும் இதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்தது. இந்தியாவின் அதிரடியை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், சண்டை நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கு முன்பாகவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் "சண்டை நிறுத்தம் ஏற்படப்போகிறது" என்று அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், பல்வேறு சந்திப்புகளிலும், "இந்த மோதலை நானே நிறுத்தினேன்" என்று டிரம்ப் கூறிவந்தார். "வர்த்தகம் செய்ய மாட்டேன்" என கூறி இரு நாடுகளையும் சமாதானப்படுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், இந்தியா அவரது இந்தக் கூற்றை திட்டவட்டமாக மறுத்தது.
ஷெபாஸ் ஷெரீப் கருத்து
"இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் தரப்புத் தலையீடு இல்லை" என்று இந்தியா தொடர்ந்து தெரிவித்துவந்தாலும், டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. இந்தப் பின்னணியில்தான், டிரம்ப் பேச்சை ஆதரிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், "அணு ஆயுத மோதலாக மாறக்கூடிய ஒரு நெருக்கடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். டிரம்ப் ஒரு அமைதியின் தூதராக உள்ளார்" என்று கூறினார்.
ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
மேலும், டிரம்பின் நோபல் பரிசு ஆசைக்கும் ஷெபாஸ் ஷெரீப் ஆதரவாக பேசினார். எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி ஒப்பந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்றினார். அவரது அருகில் பல்வேறு உலகத் தலைவர்களும் இருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பிரதமரை பார்த்து டிரம்ப், "ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் அன்றைக்கு எனக்குச் சொன்னதை இப்போ சொல்லுங்கள்," என்றார்.
நோபல் பரிசுக்கு தகுதியானவர் டிரம்ப்
அடுத்தடுத்து பேசிய ஷெபாஸ் ஷெரீப், டிரம்பைப் பெரிதும் பாராட்டினார். ஏனெனில், "சமகால வரலாற்றில் இது மிகச் சிறந்த நாட்களில் ஒன்றாகும். டிரம்ப் தலைமையிலான அயராத முயற்சிகளுக்குப் பிறகு அமைதி ஏற்பட்டுள்ளது. இந்த பூமியை அமைதி மற்றும் செழிப்புடன் வாழக்கூடிய இடமாக மாற்ற டிரம்ப் கடுமையாக உழைத்துள்ளார்" என்றும், "இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தடுத்ததற்காக டிரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர்" என்றும் ஷெரீப் கூறினார்.












Click it and Unblock the Notifications