"இந்தியர்களுக்கு இனி வேலையில்லை".. H 1B விசாவில் சென்றோருக்கு சிக்கல்! அமெரிக்க ஆளுநர் புது உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழங்களில் எச் 1பி விசாவில் இருப்பவர்களை இனி பணியமர்த்த கூடாது. அமெரிக்க பல்கலைக்கழங்களில் அமெரிக்கர்களுக்கு தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதனை அனைத்து பல்கலைக்கழங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியர்கள், சீனர்கள் உள்பட எச் 1பி விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கர்களின் வேலைகளை பறிப்பதாக கூறி எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார் டிரம்ப்.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் அங்கு வெளிநாட்டினர் பணி செய்யும் வகையில் எச் 1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாக்களை பயன்படுத்தி தான் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஐடி, பல்கலைக்கழகங்கள் உள்பட பிற துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி இருப்பதன் மூலம் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். ஏனென்றால் அமெரிக்காவின் எச் 1பி விசா திட்டத்தில் 70சதவீதம் வரை இந்தியர்கள் தான் பயனடைந்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் தான் தற்போது இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் எச் 1பி விசாவில் வந்தவர்களை பணி அமர்த்தப்போவது இல்லை. அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்று புளோரிடாவின் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார். புளோரிடா மாநில பல்கலைகழகங்களில் எச் 1பி விசாவில் உள்ளவர்களை தடை செய்து அமெரிக்கர்களை பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், ‛‛புளோரிடா மாநில பல்கலைக்கழங்களில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும். அனைத்து பல்கலைக்கழக பதவிகளுக்கும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் புளோரிடாவில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை வழங்க வேண்டும். புளோரிடா கல்வி நிறுவனங்களில் எச் 1பி விசாவில் உள்ளவர்களை பயன்படுத்துவதை இனி பொறுத்து கொள்ள முடியாது. இதனால் இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர புளோரிடா ஆளுநர் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவை எடுத்து கொண்டால் புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழங்கள் மிகவும் புகழ்பெற்றவை. இந்த பல்கலைக்கழங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் அமெரிக்கர்கள் பட்டதாரிகளாகவும், முனைவர்களாகவும் படிப்பை முடித்து வெளியேறி வருகின்றனர்.
இங்குள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் சீனா, இந்தியா உள்பட பல வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பல்கலைகழக ஊழியர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்களாக பணியமர்த்தப்பட்டு வருகின்றன. இவர்கள் எச் 1பி விசாவில் பணியாற்றி வருகிறார்.
இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது. இப்படியான சூழலில் தான் புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் எச் 1பி விசாவில் வெளிநாட்டினரை பணிக்கு சேர்க்க வேண்டாம் என்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications