கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்!
வாஷிங்டன்: இந்தியா மீது 12.5% கூடுதல் வரியை விதிக்க அமெரிக்க முடிவெடுத்திருக்கிறது. ஆனால், இதற்கான காரணமாக அந்நாடு முன்வைத்திருக்கும் விஷயங்கள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, கொத்தடிமை உழைப்பு மூலம் உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தங்களின் நாடுகளுக்குள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்கவும், அதற்கான சட்டங்களை முறையாக அமல்படுத்தவும் இந்தியா போன்ற நாடுகள் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா மீது வரி
இந்தியா மீது அமெரிக்கா வரியை விதிப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரும் வரியை விதித்திருக்கிறது. ஆனால், அதற்கு சொல்லப்பட்ட காரணம் வேறு. அதாவது அமெரிக்காவிலிருந்து உற்பத்தியாகி இந்தியாவில் விற்பனைக்கு வரும் பொருட்களுக்கு இந்தியா, அதிக வரியை விதிக்கிறது. எனவே நாங்களும் இந்திய பொருட்களுக்கு அதே அளவில் வரியை போடுவோம் என்று சொல்லப்பட்டிருந்தது.
இரு நாடுகளும் சமமான அளவில் வரியை போட்டுக்கொண்டன. எனவே இது பரஸ்பர வரி என்ற சொல்லப்பட்டது. ஆனால், இப்போது போட இருக்கும் வரிக்கு டிரம்ப் சொல்லும் காரணம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
டிரம்பின் குற்றச்சாட்டு
கொத்தடிமை உழைப்பு மூலம் உலகளவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தங்களின் நாடுகளுக்குள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க, 12.5% வரியை விதிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளாராம். இந்தியா மட்டுமல்லாது மொத்தம் 54 நாடுகள் மீது இந்த வரி விதிக்கப்பட இருக்கிறது. இந்தியா கொத்தடிமை முறையை ஒழிக்க போதுமான சட்டங்களை இயற்றவில்லை என்பதால்தான் இப்படி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.
பிரிட்டனுக்கு கூட
இதில் கொடுமை என்னவெனில், பிரிட்டனுக்கு கூட இந்த வரி விதிக்கப்பட இருக்கிறது. பிரிட்டனில் இன்னும் கொத்தடிமை முறை இருப்பதாக அமெரிக்கா நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கையான விஷயம்தான்.
சரி இந்தியா கதைக்கு வருவோம். இந்தியாவை பொறுத்தவரை, 1976ம் ஆண்டே கொத்தடிமை முறையை ஒழிக்க சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் தற்போது வரை மீட்கப்பட்டு வருகின்றனர். அதாவது இந்த முறை இன்னும் முழுமையாக ஒழிந்துவிடவில்லை என்பது உண்மைதான்.
செங்கல் சூளை
இருப்பினும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தயாரிப்பில் கொத்தடிமை முறை இல்லை. செங்கல் சூளையில்தான் பரவலாக இந்த முறை இருக்கிறது. நாம் என்ன அமெரிக்காவுக்கு செங்கலையா ஏற்றுமதி செய்கிறோம்?
ஆக மொத்தத்தில், எதையாவது காரணம் சொல்லி வரியை விதிக்க வேண்டும். அதுதான் அமெரிக்காவின் நோக்கம். குட்டையை குழப்பிவிட்டுவிட்டு, அதில் ஏதாவது லாபம் கிடைக்கிறதா என்று டிரம்ப் பார்க்கிறார். இதெல்லாம் கடைசியில் அவருக்கே பேக் ஃபயர் ஆகிவிடாமல் இருந்தால் சரி.












Click it and Unblock the Notifications