வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்!
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், டிரம்ப் அறிவிப்புகளை வைத்து சத்தமே இல்லாமல் சில டிரேட்கள் நடந்துள்ளன. இதில் வெறும் 20 நிமிடத்தில் ஒரு மர்ம டிரேடர் ரூ.840 கோடியை லாபமாக அள்ளி இருக்கிறார். யார் அந்த டிரேடர் இவ்வளவு பெரிய தொகையை இவர் லாபமாக அள்ளியது எப்படி என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் எப்போது எந்த அறிவிப்பை வெளியிடுவார் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. டிரம்ப் வழக்கம் போலத் தனது இஷ்டத்திற்கு அறிவிப்பதை இந்த போரிலும் விடவில்லை. ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்கள் நிறுத்தி வைக்கப் போவதாக அறிவித்தார்.

டிரம்ப்
இதை உலக நாடுகள் நம்பிய நிலையில், போர் முடிவுக்கு வந்துவிடும் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், இஸ்ரேல் தரப்போ அதுபோல பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவே இல்லை.. தாக்குதல் தொடரும் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. டிரம்ப்பும் அதன் பிறகு தனது போஸ்ட்டை சத்தமே இல்லாமல் டெலிட் செய்துவிட்டது தனிக்கதை.
பல நூறு கோடி லாபம்
அதேநேரம் மோதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவிப்பதற்கு சற்று முன்பு, உலக சந்தைகளில் மர்ம வர்த்தகம் நடந்துள்ளது. இதில் யார் என்றே அடையாளம் தெரியாத ஒரு மர்ம டிரேடர் வெறும் 20 நிமிடங்களில் சுமார் ரூ.840 கோடி ($100 மில்லியனுக்கும் மேல்) லாபம் ஈட்டப்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்..
திங்கட்கிழமை காலை நியூயார்க் நேரப்படி 6:50 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:20), அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் திடீர் டிரேட்கள் நடந்துள்ளன. காலை 6.30க்கு சந்தைகள் திறந்திருக்காது. ப்ரீ டிரேட்டிங்கில் இவ்வளவு பெரிய டிரேட் எல்லாம் நடக்காது. இது அசாதாரணமானது. ஆனால், இந்த டிரேட் நடந்து சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு (காலை 7:05), டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தாக்குதல்களை நிறுத்துவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்பே மர்ம வர்த்தகங்கள் முடிந்தன.
இரு டிரேட்கள்
இதில் முக்கியமான இரு டிரேட்கள் நடந்துள்ளன. ஒன்று போர் பதற்றங்களால் பங்குச்சந்தைகள் சரிந்து இருந்த நிலையில், அது உயரும் என ஒரு டிரேட் நடந்துள்ளது. இதைக் கணித்து ரூ. 12,600 கோடி ($1.5 பில்லியன்) S&P 500 ஃபியூச்சர்ஸ் வாங்கப்பட்டன. அதேபோல போரால் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்த்து ரூ. 1,615 கோடி ($192 மில்லியன்) எண்ணெய் ஃபியூச்சர்ஸ் விற்கப்பட்டன. குறிப்பாக, ஒரு நிமிட இடைவெளியில், ரூ. 4,870 கோடி ($580 மில்லியன்) மதிப்பிலான டிரேட்கள் நடந்துள்ளன. இது வழக்கமான டிரேட்டை காட்டிலும் நான்கு முதல் ஆறு மடங்கு அதிகமாகும். அதாவது அந்த மர்ம டிடேர் பங்குச்சந்தை உயரும், கச்சா எண்ணெய் சரியும் என்றே டிரேட் செய்திருந்தார்.
இந்த டிரேட்கள் நடந்து முடிந்த பிறகு டிரம்பின் அறிவிப்பு வந்தது. வந்தவுடன் ஃபியூச்சர்ஸ் மார்ரெட் 2.5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அதேபோ கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்தது.. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் $109-லிருந்து $92 ஆகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கிட்டத்தட்ட 6 சதவீதம் வீழ்ச்சியடைந்து $88.70 ஆகவும் குறைந்தன.
கொட்டியது லாபம்
மர்ம டிரேடர் கணித்தது போலவே நடக்கவே அவருக்குப் பெரிய லாபம் கிடைத்தது. எண்ணெய் விலையில் ஏற்பட்ட இறக்கத்தால் மட்டுமே அவர் 20 நிமிடங்களுக்குள் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக லாபத்தை ஈட்டியிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன. இது தவிரப் பங்குச்சந்தையிலும் கணிசமான லாபத்தைப் பார்த்து இருக்கிறார். சொல்லப்போனால் டிரம்ப் இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவார் என்பதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் இருந்தது. அப்படியிருக்கும் போது ஒருவர் மிகத் துல்லியமாக இரண்டு சந்தைகளில் ரூ. 14,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை மேற்கொண்டது சந்தேகத்தை கிளப்புவதாகவே இருக்கிறது.
அதேநேரம் இப்படி நடப்பதும் இது முதல்முறை இல்லை. குறிப்பாக டிரம்பின் அறிவிப்புக்கு முன்பு இதுபோல மர்ம டிரேட்கள் அடிக்கடி நடக்கிறது. உதாரணமாக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ கைது செய்யப்படுவதற்குச் சற்று முன்பு, அமெரிக்கா ஜனவரி மாதத்திற்குள் வெனிசுலாவை ஆக்கிரமிக்கும் என்று பாலிமார்க்கெட் தளத்தில் ஒரு பயனர் $34,000 பெட் கட்டினார். அதில் அவருக்கு பல கோடி லாபம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications