"ஈரான் மீது இனி தாக்குதல் இல்லை.." திட்டவட்டமாக சொன்ன டிரம்ப்.. மத்திய கிழக்கில் மிகப் பெரிய ட்விஸ்ட்
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஈரானுக்குச் சொந்தமான உலகின் மிகப் பெரிய எல்என்ஜி மையமான சவுத் பார்ஸ் எரிவாயு தளத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இனிமேல் இந்த எரிவாயு மையம் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது என அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இதற்கிடையே ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு தளத்தைச் சமீபத்தில் இஸ்ரேல் தாக்கியது. உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு தளமான இதன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளார்.

டிரமப் திட்டவட்டம்
அதாவது கத்தார் மீது ஈரான் தாக்குதலை நடத்தக்கூடாது என்ற டிரம்ப், அப்படி கத்தாரை ஈரான் தாக்கவில்லை என்றால் இஸ்ரேலும் சவுத் பார்ஸ் எரிவாயு தளத்தைத் தாக்காது என்று டிரம்ப் தெரிவித்தார். சவுத் பார்ஸ் கடல்சார் எல்என்ஜி தளத்தை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் தனது பெர்சியன் வளைகுடா அண்டை நாடுகளின் எரிசக்தி வசதிகள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக டிரம்ப் மேலும், "மத்திய கிழக்கில் நடந்த நிகழ்வுகளால் கோபமடைந்த இஸ்ரேல், ஈரானின் முக்கிய சவுத் பார்ஸ் எரிவாயு தளத்தைத் தாக்கியது. அதன் ஒரு சிறிய பகுதிதான் பாதிக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எந்தத் தகவலும் முன்கூட்டியே வழங்கப்படவில்லை. கத்தாருக்கும் இதில் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. இதுபோல ஒரு தாக்குதல் நடக்கும் என்பது கூட கத்தாருக்கு தெரியாது.
எச்சரிக்கை
துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதலின் உண்மைகளைத் தெரியாமல்.. கத்தாரின் LNG எரிவாயு வசதியின் ஒரு பகுதியை நியாயமற்ற முறையில் ஈரான் தாக்கியுள்ளது. கத்தார் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தவில்லை என்றால் மிகவும் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க சவுத் பார்ஸ் தளத்தில் இனி இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது. இருப்பினும், கத்தார் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் உதவி அல்லது சம்மதம் இல்லாமல், ஈரான் முன்னெப்போதும் கண்டிராத ஒரு சக்தியுடன் சவுத் பார்ஸ் எரிவாயு தளத்தை அமெரிக்கா தகர்த்துவிடும்" என்று டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
இயற்கை எரிவாயு தளம்
போர் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று புதன்கிழமை அன்று ஈரானின் பிரம்மாண்டமான கடல்சார் சவுத் பார்ஸ் இயற்கை எரிவாயு தளத்தை இஸ்ரேல் தாக்கியது. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளின் எரிசக்தி வசதிகள், கத்தாரில் உள்ள எரிவாயு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக கத்தார் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. சம்பந்தமே இல்லாமல் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கோபத்தின் உச்சத்திற்கே போன கத்தார், ஈரானின் தூதரக அதிகாரிகளை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
பின்னணி
கத்தார் மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஹப்ஷான் எரிவாயு மையத்தையும், பாப் எரிவாயு தளத்தையும் கூட ஈரான் தாக்கியது. அமீரக அரசு இதை, ஈரானின் இஸ்ரேல்- அமெரிக்கப் போரில் ஒரு ஆபத்தான பதற்றம் என்றது. இந்தத் தளங்கள் மீது நடந்த தாக்குதலுக்குப் பிறகு எரிவாயு ஆபரேஷன்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீதான இந்தத் தாக்குதல்கள், வளைகுடா நாடுகள் மீது அழுத்தத்தை மேலும் அதிகரிக்கின்றன. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியே வருகிறது. ஈரானின் இந்த தாக்குதல்களில் இருந்து அண்டை நாடுகள் தங்களைத் தற்காத்து வந்தாலும் இதுவரை எந்தவொரு எதிர்த்தாக்குதலையும் செய்யவில்லை. ஒருவேளை மற்ற அரபு நாடுகளும் ஈரானுக்கு எதிராக இறங்கினால் அது மிக மோசமான பேரழிவையே ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications