அமெரிக்க தேர்தல் முறையில் மாற்றம் வேணும்.. இந்தியாவை பாருங்க! அதிரடி பிளானில் இறங்கிய டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்றும், இந்தியாவை போன்று வாக்காளர்களுக்கு கறாரான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
இது தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப், இனி தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு அமெரிக்கர்களும், தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்க பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி பேசிய அவர், "அமெரிக்க மாநிலங்கள் தங்களின் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்புக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், அரசு திறமைத்திறன் துறைக்கும் (Department of Government Efficiency) அனுப்பி வைக்க வேண்டும். தேர்தலில் மோசடிகள் நடப்பது தொடர்பாக சந்தேகங்கள் எழும்போது அது பற்றி விசாரிக்க மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது.
அஞ்சல் மூலம் பதிவாகும் ஓட்டுகள், தேர்தலுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும். தேர்தல் நாள் முடிவதற்குள் வாக்கு பதிவு செய்யப்பட்டு, அது ஏற்கப்பட்டிருக்க வேண்டும். வாஷிங்டன், புவெர்டோ ரிகோ, விர்ஜின் தீவுகள் போன்ற 18 மாநிலங்களில் தேர்தல் நாளுக்கு பிறகு வந்த அஞ்சல் வாக்குகளை ஏற்கும் நடைமுறை இருக்கிறது. இனி தேர்தல் நாளுக்கு பிறகு வந்த அஞ்சல் வாக்குகள் ஏற்கப்பட மாட்டாது.
பாதுகாப்பு விதிமுறைகளுக்காக இனி QR Code அல்லது Barcode உள்ள வாக்குசீட்டுகளை ஏற்கக் கூடாது. தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சாஃப்ட்வேர் புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவை நெறிமுறைகளை பின்பற்றுகிறதா? என்பதை தேர்தல் உதவிக்குழு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும்.
வெளிநாட்டவர்கள் தேர்தல் நன்கொடையை வழங்க தடை விதிக்கப்படுகிறது. சட்டத்தில் உள்ள சில ஷரத்துகளை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க தேர்தலுக்காக மறைமுகமாக நன்கொடையை கொடுத்து வருகிறது. இனி இது தடை செய்யப்படும்.
தேர்தல் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவை பாருங்கள். அந்நாடு கறாராக இருக்கிறது. பிரேசிலும் அப்படித்தான். எனவே, இனி அமெரிக்காவும் இந்த நாடுகளின் பாதைகளில் பயணிக்கும். இங்கு தேர்தல் முறைகேடுகளுக்கு இடமில்லை" என்று கூறியுள்ளார்.
ஜெர்மனி, கனடா - காகித வாக்குசீட்டுகளை (Paper Ballots) மட்டுமே பயன்படுத்துகின்றன. டென்மார்க், ஸ்வீடன் - அஞ்சல் வாக்குகளை வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் வழங்குகின்றன.
டிரம்ப் திடீரென இப்படி தேர்தல் மாற்றங்களை கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது 2020ல் பைடனை எதிர்த்து இவர் களமிறங்கியிருந்தார். ஆனால் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு தேர்தல் முறைகேடுகள்தான் காரணம் என்று டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த தோல்வியையடுத்து அவரது அரசியல் வாழ்க்கை பல நெருக்கடியை சந்தித்தது. வன்கொடுமை புகார், முக்கிய ஆவணங்களை திருடியது, ஆதரவாளர்களை வைத்து வெள்ளை மாளிகையை தாக்கியது என ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருந்தன.
இருப்பினும் இதனை தகர்த்து, 2024 தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கிறார். அதிபரான பிறகு டிரம்ப் கொண்டுவந்த மாற்றங்கள் பெரிதும் விவாதிக்கப்படுகின்றன. அந்த வகையில் தேர்தல் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றம் கவனம் பெற்றிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு அவர் இந்தியாவை மேற்கோள்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications