"கிரீன் கார்டு ரத்து.." யாரும் தப்பவே முடியாது.. டிரம்ப் நடவடிக்கையால் இந்தியர்களுக்கு சிக்கல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமின்றி சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களும் கூட பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவில் இப்போது ஒரு புதிய பிரச்சினை எழுந்துள்ளது. இந்த பிரச்சினையால் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்கள் உட்படப் பல லட்சம் பேர் பாதிக்கப்படலாம்.
டிரம்ப் அதிபராக வந்த பிறகு அவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பல ஆயிரம் பேர் நாடுகடத்தவும் பட்டனர். ஆனால், டிரம்ப் நடவடிக்கைகள் அத்தோடு நிற்கவில்லை. சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்கள் மீதும் கூட டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய பிரச்சினை
இதற்கிடையே அமெரிக்காவில் இப்போது ஒரு புதிய பிரச்சினை எழுந்துள்ளது. இந்த பிரச்சினையால் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்கள் உட்பட பல லட்சம் பேர் பாதிக்கப்படலாம். அதாவது எந்தவொரு நபரின் கிரீன் கார்டையும் எந்த நேரத்திலும் ரத்து செய்ய அதிகாரம் அட்டர்னி ஜெனரலுக்கு இருப்பதாக அமெரிக்க நீதித்துறை பெடரல் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. அந்த நபர் கிரீன் கார்டை பல ஆண்டுகளாக வைத்திருந்தாலும் கூட அதை ரத்து செய்யும் உரிமை அட்டர்னி ஜெனரலுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுவே இப்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
இந்தியர்களுக்குத் தலைவலி
கிரீன் கார்டு விவகாரத்தைப் பொறுத்தவரை டிரம்பிற்கு முன்பு, டிரம்பிற்கு பின்பு என நாம் பார்க்கலாம். முன்பெல்லாம் எப்படியாவது கிரீன் கார்டை வாங்கிவிட்டால் போதும், அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்பதே பலரது கனவாக இருந்தது. ஆனால், டிரம்ப் வந்த பிறகு இப்போது அந்த நிலை மாறிவிட்டது. கிரீன் கார்டு வாங்கியிருந்தாலும் கூட அது எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.. இது அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
பின்னணி
நியூ ஜெர்சியை சேர்ந்த இமாம் முகமது என்பவர் மீதான பெடரல் கேஸுக்கு பிறகே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. அவர் 2006ல் கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்த நிலையில், அவருக்கு மறுக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்ற போதிலும், அவருக்கு க்ரீன் கார்டு வழங்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கிலேயே கிரீன் கார்டு வழங்கப்பட்டாலும் கூட அதை ரத்து செய்யும் உரிமை அட்டர்னி ஜெனரலுக்கு இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யாரும் தப்ப முடியாது
இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் நீதித்துறை சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் லிண்ட்சே மர்பி கூறுகையில், "எந்த நேரத்திலும் கிரீன் கார்டை ரத்து செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு அதிகாரம் உள்ளது. நிர்வாக செயல்முறை முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றால் கிரீன் கார்டு வழங்கி எத்தனை காலம் ஆகிறது என்பது முக்கியமல்ல. 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்க முடியும். ஏனென்றால் கிரீன் கார்டு விதியில் எந்தவொரு கால அவகாசமும் குறிப்பிடப்படவில்லை என்றார்.
அதாவது ஒருவர் கிரீன் கார்டு பெற்று 50 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்திருந்தாலும் கூட அவர் மீது பெடரல் அரசால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது. அதாவது ஆவணங்களில் பிழைகள் இருந்தால் கூட ஒருவரின் கிரீன் கார்டை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்ய முடியும். இருப்பினும், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கவே முடியாது
விண்ணப்பங்களில் பிழைகள் கண்டறியப்பட்டால்.. விண்ணப்பித்து 30 நாட்களில் அரசு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அரசின் முடிவு இறுதியானதாகவே கருத வேண்டும். வெறுமன விண்ணப்ப பிழையைக் காரணம் காட்டி பல ஆண்டுகள் கழித்து ஒருவரது கிரீன் கார்டுகளை ரத்து செய்வதை ஏற்க முடியாது என்றும் கூறுகிறார்கள். பொதுவாகத் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரின் கிரீன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் சிறு பிழைகளுக்குக் கூட ரத்து செய்ய முடியும் எனச் சொல்லியிருப்பதே விவாதம் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications