டிரம்பின் கோல்டு காயின் பிசினஸ்.. அமெரிக்க அதிபர் சட்டத்தை மீறுகிறாரா? என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதுமே வித்தியாசமானவர், சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். இப்போது அவர் செய்திருக்கும் ஒரு காரியம் ஒட்டுமொத்த அமெரிக்காவையுமே அதிர வைத்திருக்கிறது. நாட்டின் மிக உயரிய, அதிகாரப்பூர்வ இடமான வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியை ஒரு தனியார் சண்டைக் களமாகவே மாற்றத் துணிந்து விட்டாராம் டிரம்ப்.. அப்படியென்ன நடந்தது?
அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் "ஃப்ரீடம் 250" (Freedom 250) என்ற பெயரில் ஜூன் 14 அன்று வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் தற்காப்புக் கலைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை விளையாட்டு போட்டி
அமெரிக்க வரலாற்றிலேயே, நாட்டின் மிக உயரிய வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் இப்படி ஒரு தொழில்முறை விளையாட்டுப் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.. இதில் என்ன ஒரு ஸ்பெணல் என்றால், இதே ஜூன் 14-ம் தேதிதான் அதிபர் டிரம்பின் 80-வது பிறந்தநாளும் கூட.
இதையெல்லாம் விடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், இந்த நிகழ்வை ஒட்டி டிரம்ப் குடும்பத்தினர் ஆன்லைனில் விற்கத் தொடங்கியிருக்கும் நினைவு நாணயங்கள்தான்...
தங்க நாணயங்கள் - ரூ.10 லட்சம்
ரியல் டிரம்ப் காயின்ஸ் (RealTrumpCoins.com) என்ற வெப்சைட்டில் , டிரம்பின் முகமும் யுஎஃப்சி இலச்சினையும் பொறிக்கப்பட்ட பிரத்யேக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் ஆரம்ப விலையே 250 டாலர்தான். இதில் உச்சக்கட்டமாக, ஒரு அவுன்ஸ் எடை கொண்ட பிரீமியம் தங்க நாணயத்தின் விலை 12,000 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது நம்ம ஊர் காசுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய்!
இந்த நாணயங்களை வாங்குபவர்களுக்கு, அதிபர் டிரம்ப் மற்றும் யுஎஃப்சி தலைவர் டானா ஒயிட் ஆகியோர் ஒன்றாக இருக்கும் பிரத்யேக போட்டோ அடங்கிய சிறப்பு பெட்டியும் தரப்படுகிறதாம். இந்த நாணயங்கள் அனைத்தும் அதிபர் டிரம்பாலேயே நேரடியாக வடிவமைக்கப்பட்டவை என்றும், அவரது மகன்கள் எரிக் டிரம்ப் மற்றும் ஜூனியர் டிரம்ப் கவனித்து வரும் டிரம்ப் ஆர்கனைசேஷன் மற்றும் யுஎஃப்சி இணைந்து வெளியிடும் அதிகாரப்பூர்வ தயாரிப்பு இது என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
விஐபி வளையங்கள்
பொதுமக்களுக்கு இதில் இலவச அனுமதி என்று கூறப்பட்டாலும், விஐபி மற்றும் வளையத்திற்கு அருகிலுள்ள ஸ்பெஷல் இருக்கைகளுக்கான ஸ்பான்சர்ஷிப் பேக்கேஜ்கள் 1.5 மில்லியன் டாலர் வரை விற்கப்படுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. நாட்டின் மிக உயரிய வெள்ளை மாளிகை வளாகத்தில் "தி கிளா" (The Claw) என்ற பெயரில் பிரம்மாண்டமான கூண்டு அமைக்கும் பணிகள் டிரம்பின் நேரடி மேற்பார்வையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதை கேள்விப்பட்டுதான் பலரும் கொந்தளித்து வருகிறார்கள்.. "நாட்டின் அதிகாரப்பூர்வ இடத்தை டிரம்ப் தனது குடும்பத் தொழிலின் லாபத்திற்கும், சொந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்துகிறார்" என்று எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கொதித்தெழுந்துள்ளனர். இது தொடர்பாக வர்ஜீனியாவைச் சேர்ந்த இருவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வு அமெரிக்க சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக நடத்தப்படவில்லை, முழுக்க முழுக்க யுஎஃப்சி பிராண்டை விளம்பரப்படுத்தவும், டிரம்பின் 80வது பிறந்தநாளைக் கொண்டாடவும், அதன் மூலம் டிரம்ப் குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் லாபம் ஈட்டவுமே நடத்தப்படுகிறது என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டிரம்பின் வணிக சொத்து?
ஆனால், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டேவிஸ் இங்கிள் இந்த விமர்சனங்களை எல்லாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதிபரின் வணிகச் சொத்துக்கள் அனைத்தும் அவரது பிள்ளைகளால் நிர்வகிக்கப்படும் தனி அறக்கட்டளையின் கீழ் உள்ளதால் இதில் எந்தவிதமான ஆதாய முரண்பாடுகளும் இல்லை என்றும், ஊடகங்கள் திட்டமிட்டு இத்தகைய சர்ச்சைகளை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். நாணயங்களின் விவரக் குறிப்பிலும், இவை முற்றிலும் தனிப்பட்ட சேகரிப்பிற்காக மட்டுமே தவிர, அரசியல் பிரச்சாரத்துடனோ அல்லது முதலீட்டு நோக்கங்களுடனோ தொடர்பில்லாதவை என்று டிரம்ப் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
என்னதான் டிரம்ப் தரப்பு மறுத்தாலும், நாட்டின் மிக உயரிய அதிகாரத்தையும், தங்களின் தனிப்பட்ட குடும்ப வணிகத்தையும் டிரம்ப் குடும்பத்தினர் மீண்டும் ஒன்றிணைப்பதாக எழுந்துள்ள இந்த சர்ச்சை அமெரிக்க அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்...!












Click it and Unblock the Notifications