ம்ஹும்.. இது ஆகுற வேலையில்ல! திடீரென ஜகா வாங்கிய ட்ரம்ப்! ஈரான் யுரேனியத்தை தூக்க எவ்வளவு நாளாகும்?
வாஷிங்டன்: ஈரானின் அணு திட்டங்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்பது மிகவும் கடினமான மற்றும் நீண்டகால நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில், "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை முற்றிலுமாக செயலிழக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது "என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த தளங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அங்கிருந்து தோண்டி எடுத்து மீட்பது மிகவும் சிரமமான மற்றும் நீண்டகால வேலை எனவும் அவர் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் யுரேனியம் செறிவூட்டல் என்பது அணு ஆயுதங்கள் மற்றும் அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை தயாரிக்கும் முக்கியமான தொழில்நுட்ப முறையாகும். இந்த முறையின் மூலம் உருவாகும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணுகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படலாம் என்பதால், பல நாடுகள் இதை கடுமையாக கண்காணித்து வருகின்றன.
ஈரான் யுரேனியம்
அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. அதாவது, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. இதற்கு எதிராக ஈரான் தரப்பில் இருந்து, அத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும், தங்களது அணுசக்தி திட்டங்கள் அமைதியான பயன்பாடுகளுக்காக மட்டுமே உள்ளன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா
இந்நிலையில், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவுக்கு மாற்றி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் டிரம்ப் முன்வைத்து வருகிறார். இது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. ஈரானின் அணு திட்டங்கள் தான் ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதை காரணமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரானின் பல முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின.
யுரேனியம் செறிவூட்டல்
இந்த தாக்குதல்கள் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியதோடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. மேலும், சமீபத்திய தாக்குதல்களில் ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் யுரேனியம் செறிவூட்டல் ஆலைகளும் அடங்கும். இந்த தாக்குதல்களின் மூலம் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திறனை குறைக்க முயற்சி செய்யப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தனது அணு திட்டங்கள்
இதற்கிடையில், கடந்த ஆண்டு இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல்கள் 12 நாட்களில் முடிவடைந்ததாக கூறப்பட்டாலும், அதற்குப் பிறகும் ஈரான் தனது அணு திட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானின் யுரேனியம் திட்டம் தொடர்பான இந்த விவகாரம் உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையில் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. யுரேனியம் மீட்பு நடவடிக்கை எளிதானது அல்ல என்று டிரம்ப் கூறியிருப்பது, இந்த பிரச்சனை இன்னும் நீண்ட காலம் நீடிக்க க்கூடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications