"இந்தியா மீது புதிய வரி.." அதிபர் டிரம்ப் தடாலடி அறிவிப்பு! இந்த முறை எந்த துறைக்கு எல்லாம் வரி?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் ஏற்கனவே இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ளார். இதனால் இந்தியா அமெரிக்கா வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா மீது புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். விவசாய இறக்குமதிகள் மீது புதிய வரிகளை விதிக்க நேரிடும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரி விதிப்பது குறித்துப் பரிசீலிப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடர்ந்து தனது இஷ்டத்திற்குப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். உலக நாடுகள் மீது ஏகப்பட்ட வரிகளை விதித்து வருகிறார். இதன் காரணமாகச் சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு மட்டுமே டிரம்ப் வரிகளைக் குறைத்து வருகிறார்.

வர்த்தக பேச்சுவார்த்தை
இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வரும் போதிலும், முழுமையாக உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த நவம்பர் மாதமே வர்த்தக உடன்பாடு எட்டப்படும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்கிறது. இந்தச் சூழலில் தான் வர்த்தகப் பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்க அதிகாரிகள் குழு இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது. நாளை அவர்கள் இந்திய பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
புதிய வரி
இந்தச் சூழலில் டிரம்ப் திடீரென வரி தொடர்பாகத் தடாலடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது விவசாயப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அரிசி மற்றும் கனடாவில் இருந்து வரும் உரங்கள் மீது இந்த வரிகள் விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்தார். இந்தியா மற்றும் கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் இல்லாத நிலையில், டிரம்ப் இதை அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டத்தின்போது டிரம்ப் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அமெரிக்க விவசாயிகளுக்கான பல பில்லியன் டாலர் மதிப்பிலான விவசாய உதவித் திட்டத்தை அறிவித்த டிரம்ப், அப்போது தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு வரிகளை விதிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

அரிசி சந்தை
அமெரிக்க அரிசி சந்தையில் மிகப் பெரிய இரண்டு பிராண்டுகள் இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை எனச் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்ட நிலையில், அதற்கு வரி தான் தீர்வு என டிரம்ப் பதிலளித்தார். அவர் மேலும், "இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வரிகள் இரண்டு நிமிடத்தில் பிரச்சனையைத் தீர்க்கும். அவர்கள் தங்கள் பொருட்களை அமெரிக்கச் சந்தையில் கொட்டி வருகிறார்கள். இதுபோல செய்யக்கூடாது" என்றார்.
மேலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், கனடாவிலிருந்து இறக்குமதியாகும் உரங்களுக்குக் கடுமையான வரிகளை விதிக்கவும் திட்டமிட்டு வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.. இது தொடர்பாக அவர், "கனடாவிலிருந்து நிறைய உரங்கள் வருகிறது.. தேவைப்பட்டால் மிகக் கடுமையான வரிகளை விதிப்போம். ஏனென்றால், அமெரிக்காவிலேயே அதன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இந்தியா அமெரிக்கா வர்த்தகம்
இந்தியா- அமெரிக்கா இடையேயான விவசாய வர்த்தகம் பல ஆண்டுகளாக மெல்ல அதிகரித்துள்ளது. பாஸ்மதி, பிற அரிசி ரகங்கள், மசாலா பொருட்கள் மற்றும் கடல் உணவு வகைகளை அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அதே நேரம் அமெரிக்காவிலிருந்து பாதாம், பருத்தி, பயிறு வகைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது.












Click it and Unblock the Notifications