"ஓவர் லோடு ஆகிட்டு" இறங்குங்கப்பா!.. 19 பயணிகளை இறக்கிவிட்டு டேக் ஆஃப் செய்த விமானம்.. என்னாச்சு
வாஷிங்டன்: அதிக அளவு பயணிகள் ஏறி படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு இருந்தால் சில நேரங்களில் பேருந்தை எடுக்க முடியாது என கண்டக்டரும் டிரைவரும், வம்படியாக பயணிகளை இறக்கி விட்டு இருப்பதை பார்த்து இருப்போம். ஆனால் விமானத்தின் எடை அதிகமாக இருப்பதால் பயணிகளை இறக்கி விட்ட வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
விமான பயணம் என்பது எப்போது கொஞ்சம் காஸ்ட்லியானதுதான். விமானம் புறப்படும் முன்பாகவே போர்டிங் பாஸ், லக்கெஜ் செக்கிங் பல கட்டங்களை தாண்டி தான் விமானத்தில் ஏற முடியும். டிக்கெட் எடுத்து விமானத்தில் ஏறிய பிறகு... இறங்குங்க என விமான பணியாளர்கள் சொன்னால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறீர்களா? நீங்கள் புருவத்தை பார்ப்பது புரிகிறது....ஆனால் உண்மையில் இப்படியான ஒரு சம்பவம் உண்மையாகவே நடைபெற்றுள்ளது. எங்கே நடந்தது... அதற்கான காரணம் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்:

பேருந்திலோ, ரயிலிலோ செல்லும் போது பயணிகள் கூட்டம் சில சமயங்களில் அலைமோதுவதை காண முடியும். குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பேருந்துகளிலும் சரி, ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். சிறப்பு பேருந்துகள் விட்டாலும் சரி.. சிறப்பு ரயில்கள் விட்டாலும் சரி...பயணிகள் கூட்டம் குறைந்திருக்காது. ரயிலில் பொது பெட்டியில் எல்லாம் கால் வைக்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் மித மிஞ்சி காணப்படும்.
பயணிகள் எடை அதிகமாக இருக்கு: அதேபோல் தொலை தூர பேருந்துகளில் கூட பேருந்தின் தரையில் அமர்ந்தபடி கூட பலரும் சொந்த ஊருக்கு செல்வதை பண்டிகை காலங்களில் காண முடியும். இன்னும் பலரோ...சொந்த ஊருக்கு போகலாம் என முடிவு செய்து கூட்டத்தை பார்த்து விட்டு ஊர் செல்ல வேண்டும் என்ற ஆசையையே கைவிட்டும் இருக்கிறார்கள். பேருந்துகளில் இதற்கு மேல் பயணிகள் ஏற இடம் இல்லை என கண்டக்டர் திட்டும் சம்பவங்கள் கூட நடந்து இருக்கின்றன.
இப்படி அளவுக்கதிமகமாக பயணிகள் ஏறுவது என்பதெல்லாம் பேருந்திலும் ரயிலிலும் சகஜம்தான்.. இதில் வியப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த பிரபலமான விமான நிறுவனம் ஈசி ஜெட், பயணிகள் எடை அதிகமாக இருப்பதாக கூறி பயணிகள் 19 பேரை இறக்கிவிட்டுள்ளது. ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு ஈசி ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5 ஆம் தேதி புறப்பட இருந்துள்ளது.
19 பேரை இறக்கி விட்ட விமானி: விமானத்தில் அனைத்து பயணிகளும் ஏறி கிளம்ப தயராக இருந்த சமயத்தில் அங்கு தட்பவெப்ப நிலை மாறிவிட்டது. கடுமையான காற்றும் வீசியது. இதனால், 9.45 மணிக்கு புறப்பட இருந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரங்கள் காத்திருந்தும் எந்த பலனும் இல்லை. போதாக்குறைக்கு விமானம் டேக் ஆஃப் இருந்த லன்சரோட் விமான நிலையம் மிகவும் சிறியது. இதனால், அதிக வேகமாக வீசிய கற்றும் குறுகிய ஓடுதளம் கொண்ட விமான நிலையம் இந்த இரண்டுக்கும் மத்தியில் விமானம் புறப்படுவதில் கடும் சவால் இருந்தது.
விமானத்தில் பயணிகள் முழுவதுமாக இருந்த நிலையில், அப்போது அங்கு நிலவிய கால சூழலுக்கு விமானம் இவ்வளவு எடையுடன் டேக் ஆஃப் ஆவது கடினம் என்பதை விமானி உணர்ந்தார். விமானத்தின் பாதுகாப்பே முக்கியம் என கருதிய விமானி, இதையடுத்து விமான நிறுவனத்திடம் பேசி விட்டு, விமானத்தில் ஏறி இருக்கும் பயணிகளில் 20 பேர் இறங்கும் பட்சத்தில் விமானத்தின் எடையானது குறைந்து விடும்.
இறங்கும் பயணிகளுக்கு 500 யூரோ: அதன்பிறகு விமானம் சிக்கலின்றி டேக் ஆஃப் ஆகிவிடும் என்றும் விமானத்திலிருந்து யார் இறங்க வேண்டும் என்பதை பயணிகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் வலியுறுத்தினார். இது தொடர்பாக பயணிகளிடம் விமானி கோரிக்கை வைக்கும் காட்சிகளை பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் தங்கும் செலவும் உணவு செலவும் போக 500 யுரோக்கள் தருவதாகவும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பயணிகளில் 19 பேர் விமானத்தில் இருந்து இறங்க சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகே விமானம் பத்திரமாக டேக் ஆஃப் புறப்பட்டுள்ளது. அதாவது இரவு 9.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 11.30 மணிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இது தொடர்பாக விமானம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 19 பயணிகளும் தாங்களாகவே விமானத்தில் இருந்து இறங்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்த பயணிகள் நேற்று தங்கள் நிறுவனத்தின் மற்றொரு விமானத்தின் மூலம் லிவர்பூல் புறப்பட்டு சென்றனர். வானிலை நிலைக்கு ஏற்றவாறு விமானத்தின் எடையில் சில வரைமுறைகள் கொண்டு வருவது வழக்கமான நடைமுறைதான். பாதுகாப்பு காரணங்களுக்காக இதே முறையைதான் அனைத்து விமானங்களும் பின்பற்றுகின்றன" என்று தெரிவித்தது.












Click it and Unblock the Notifications