அமெரிக்காவில் இனி கிரீன் கார்டு கிடைக்காது.. டிரம்ப் வைத்த பெரிய ஆப்பு! இந்தியர்களுக்கு சிக்கல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கிரீன் கார்டு விநியோகத்தை அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். இதன் மூலம் அமெரிக்காவுக்குள் நுழைந்த 2.35 லட்சம் அகதிகள் கிரீன் கார்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த உத்தரவால் இந்தியர்களுக்கு நேரடியாக பாதிப்பு இல்லை என்றாலும், எதிர்காலத்தில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கு இடையில் அப்போது அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், அமெரிக்காவுக்குள் நுழைந்த 2.35 லட்சம் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமையை வழங்கும் விதமாக கிரீன் கார்டுகளை கொடுத்தது. ஆனால், கிரீன் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் எந்த கட்டுப்பாடும் பின்பற்றப்படவில்லை என்றும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

திரும்ப பெறப்படும் கிரீன் கார்டுகள்
எனவே கிரீன் கார்டு வழங்கப்பட்ட அகதிகளின் நிலையை மறுபரிசீலனை செய்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிரீன் கார்டு உரிமத்தை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
ஏற்கனவே கிரீன் கார்டு பெற்றிருக்கும் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள், 90 நாட்களுக்குள் மறு நேர்காணலுக்கு வர வேண்டும் என்றும், அவர்கள் தேசிய பாதுகாப்புக்கோ, பொது பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்களுக்கு வழங்கப்பட்ட கிரீன் கார்டுகள் தொடரும் என்றும் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
பாதிப்பு யாருக்கு?
இந்த உத்தரவு மூலம் காங்கோ, சிரியா ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான், வெனிசுலா மற்றும் உக்கரைன் ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மியான்மரில் தற்போது நிலைமை மேம்பட்டு வருவதால், அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது கடும் எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. குறிப்பாக மனிதநேய அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து வருகின்றன.
எதிர்ப்பு
போர், உள்நாட்டு பதற்றம் மற்றும் இதர அசாதாரண சூழ்நிலை காரணமாக சொந்த நாட்டை விட்டு, மண்ணை விட்டு அகதிகளாக குடிபெயர்கின்றனர். இப்படி வரும்போது சர்வதேச அமைப்புகளின் முழு பரிசோதனைகளை கடந்துதான் வந்து சேர்கின்றனர். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், அகதிகளுக்கான கிரீன் கார்டை பறிப்பது என்பது ஏற்புடையது அல்ல என்று மனிதநேய அமைப்புகள் கூறியுள்ளன.
இந்தியர்களின் நிலை
ட்ரம்ப் உத்தரவால் இந்தியர்களுக்கு நேரடியான பாதிப்புகள் கிடையாது. ஆனால், ஏற்கனவே கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்களுக்கு, அதாவது அகதிகள் அல்லாத இந்தியர்களுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். அகதிகள் அல்லாத குடியேற்றவாசிகளும் கிரீன் கார்டை பெற கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.
அமெரிக்காவில் மொத்தம் 18 லட்சம் பேர் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். இதில் 12 லட்சம் பேர் வரை இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் நெருக்கடிகளை சந்திக்க நேரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications