டிரம்பின் வரி விதிப்புக்கு தடை போட்ட நீதிமன்றம்.. தாறுமாறாக சரிந்த தங்கம் விலை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்புக்கு அந்நாட்டு வர்த்தக நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் போட்ட வரி விதிப்பு கொள்கை காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயம் இல்லாத சூழல் ஏற்பட்டது. இது தங்கம் விலையில் நேரடியாக பாதித்தது. இதனால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது.

இத்தகைய சூழலில் தான் தற்போது டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பிற்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை அந்நாட்டு வர்த்தக நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு டிரம்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்யும் நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, இறக்குமதி வரிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள சூழலில், அமெரிக்க சந்தைகளில் தங்கம் விலை தாறுமாறாக சரிந்துள்ளது. ஸ்பாட் கோல் 0.5 சதவீதம் குறைந்துள்ளது. அவுன்ஸ் $3,262.99 ஆக உள்ளது. மே 20 ஆம் தேதிக்கு பிறகு இந்த அளவுக்கு குறைந்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க கோல்டு ஃபியூட்சர்ஸும் 1.1 சதவீதம் சரிந்து $3,259.50 ஆக உள்ளது. இந்த விலை சரிவு சர்வதேச அளவில் எதிரொலிக்கும் என்பதால், தங்கம் விலை வரும் வாரங்களில் கணிசமாக குறையலாம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இன்று தங்க விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து இருக்க கூடிய நிலையில், இது மேலும் சரியுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமெரிக்கா நீதிமன்றம் தடை போட்டதை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மேல் முறையீட்டு தீர்ப்பு எப்படி அமயும் என்பதை தங்கம் விலை நிலவரத்தை கணிக்க முடியும் என்று நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. எனினும், தற்போதைக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுக்கலாம் என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,150-க்கும், ஒரு பவுன் ரூ.57, 200-க்கும் விற்பனை ஆனது. ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து கொண்டே வந்ததால், விரைவில் 60 ஆயிரத்தை தங்கம் விலை தொட்டாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை என நினைத்த காலம் போய் ஒரு சவரன் தங்கம் மட்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டி வரை சென்றது.
அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் தங்கம் விலையானது 17 ஆயிரம் விலை உயர்ந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு என்பது இருந்தது. ஒரு ஆண்டுக்கே 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையே அதிகபட்சமாக தங்கம் விலை உயர்வு என்பது இருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகள், போர் பதற்றம் உள்ளிட்டவை காரணமாக இந்த தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது.
அதாவது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.74,320 ஐ தாண்டி விற்பனை ஆனது. அந்த நேரத்தில் சீனா உள்பட பல்வேறு நாடுகளின் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பு நடைமுறையை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் கூறினார். இதனையடுத்து தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. அதாவது அதற்கு மறுநாளே தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்து ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை ஆனது. அதன்பிறகு கூடுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 71,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications