"மிக மோசமான குற்றவாளிகள்.." அமெரிக்காவின் லிஸ்டில் 89 இந்தியர்கள்.. டிரம்ப் நிர்வாகம் அதிரடி கைது!
வாஷிங்டன்: அமெரிக்காவின் டிரம்ப் அரசு கடந்த 2025 முதல் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் பட்டியலை "மிக மோசமான குற்றவாளிகள்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் சுமார் 25,000க்கும் அதிகமானோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 89 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகும். அவர்கள் யார்.. எதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு, அவர் குடியேற்றத் துறைக்குப் பல்வேறு அதிகாரிகளைக் கொடுத்தார். அமெரிக்க மண்ணில் குற்றம் செய்துவிட்டு இருப்போரைக் கைது செய்ய உத்தரவிட்டார். இதில் பல சர்ச்சை சம்பவங்கள் நடந்தாலும் கூட டிரம்ப் நிர்வாகம் இதில் உறுதியாக இருந்தது. இதனால் அமெரிக்கா முழுக்க ஏகப்பட்ட கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வெளியான லிஸ்ட்
இதற்கிடையே அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, முக்கியமான லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குடியேற்ற அதிகாரிகளால் இதுவரை கைது செய்யப்பட்ட மிக மோசமானவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. Arrested: Worst of Worst என்ற பெயரிலேயே இந்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் 2025 முதல் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 25,000 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பட்டியலில் 89 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 89 இந்தியர்கள் பெரும்பாலானோர் நிதி சார்ந்த மற்றும் வன்முறைக் குற்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் கைது
அமெரிக்கக் குடியேற்றத் துறையின் இந்த லிஸ்ட்டில் கைது செய்யப்பட்ட 25,000 பேரின் பெயர்கள், அவர்களது போட்டோ, கைது செய்யப்பட்ட இடங்கள் மற்றும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. "மிக மோசமானவர்கள்" என்று குறிப்பிடப்படும் இவர்கள், நிதி மோசடி, வன்முறைக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், பாலியல் தாக்குதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது தண்டிக்கப்பட்டுள்ளனர்.
டிரம்ப் நிர்வாகம் சொல்வது என்ன!
இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உதவிச் செயலாளர் டிரிசியா மெக்லாலின் கூறுகையில், "எங்கள் நிர்வாகம் எவ்வளவு தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. வெளிப்படைத்தன்மை உறுதி செய்கிறது. இதில் எங்கள் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சட்டவிரோதக் குற்றவாளிகள் யார், அவர்கள் என்ன குற்றங்களைச் செய்தார்கள்.. ஏன் அவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பதை விளக்கியுள்ளோம்" என்றார்.
இந்த லிஸ்ட்டில் உள்ள 89 இந்தியர்கள், போதைப்பொருள் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், கொள்ளை, குடும்ப வன்முறை, மோசடி, கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பலவிதமான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இவர்களின் பதிவுகள், அவர்களின் பூர்வீக நாடுகள் மற்றும் அவர்கள் கைது செய்யப்பட்ட அமெரிக்க மாகாணங்கள் அந்தப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது..
89 இந்தியர்கள்
ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வைத்தும் இதில் தேட முடியும். அப்படித் தேடுகையில் தான் 89 இந்தியர்கள் இதில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் குறைந்தது 22 குற்றச்சாட்டுகள் வரி ஏய்ப்பு, மோசடி (wire fraud) போன்ற நிதி சார்ந்த குற்றங்களுடன் தொடர்புடையவை. மீதமுள்ள குற்றச்சாட்டுகளில், 21 பேர் தாக்குதல் மற்றும் திருட்டு போன்ற வன்முறைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச் சென்று கொலை வழக்கை எதிர்கொள்ளும் ஒருவர் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
அதேநேரம் இந்த லிஸ்ட்டை இப்படிப் பொதுவெளியில் வெளியிட்டதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதில் இருக்கும் பலரும் வெறுமன குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மட்டுமே! எந்தவொரு விஷயத்திற்கும் தண்டிக்கப்பட்டவர்கள் இல்லை. வெறுமன குற்றச்சாட்டிற்கு இதுபோல செய்வது நியாயம் இல்லை என்ற குரல்களும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications