அமெரிக்கா இன்றிரவு எடுக்கப் போகும் மேஜர் முடிவு.. தங்கத்தின் தலையெழுத்தே அதில் தான் அடங்கி இருக்கு!
வாஷிங்டன்: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், இன்று முக்கிய நிகழ்வு நடக்கப் போகிறது. அதாவது அமெரிக்க மத்திய வங்கி இன்று முக்கியமான ஒரு முடிவை எடுக்கப் போகிறது. இன்று அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவே தங்கம் விலை அடுத்த சில காலம் எப்படிச் செல்லும் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே ஒவ்வொரு நாளும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு தங்கம் விலை எங்கோ உச்சத்திற்குப் போய்விட்டது. இதனால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களால் எளிதாகத் தங்கத்தை வாங்கவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை
இந்த முறை தங்கம் விலை இந்தளவுக்கு உயரப் புவிசார் அரசியலே முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டு வரிகளை வீசி வருகிறது. அதேபோல ரஷ்யா உக்ரைன் மோதலும் கூட முடிவே இல்லாமல் தொடர்கிறது. இதற்கு நடுவே மத்தியக் கிழக்கு பதற்றமும் தொடர்வதே தங்கம் விலை தொடர்ந்து உயரப் பிரதானக் காரணமாக இருக்கிறது.
இவை எல்லாம் சேர்த்தே தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொடக் காரணமாக இருக்கிறது. நேற்றைய தினம் கூட சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 560 உயர்ந்து, ரூ 82,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ 10,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்தளவுக்கு உச்சத்திற்குப் போவது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்க மத்திய வங்கி
இதனால் என்று தான் தங்கம் விலை குறையும் எனப் பொதுமக்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். ஆனால், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. ஏனென்றால் அமெரிக்க மத்திய வங்கியின் இரண்டு நாள் கூட்டம் இன்றுடன் முடிகிறது. இன்று வட்டி விகிதம் தொடர்பாக அந்நாட்டு வங்கி முக்கியமான முடிவை எடுக்கப் போகிறது. அதாவது இப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் 4.25-4.50ஆக உள்ள நிலையில், அதைக் குறைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அந்நாட்டின் மத்திய வங்கி இன்று முடிவெடுக்கும்.
தங்கம் விலை இதைப் பொறுத்தும் மிகப் பெரியளவில் மாறும். அதாவது அமெரிக்க மத்திய வங்கி வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை எகிறும். வட்டியைக் குறைக்கவில்லை என்றால் தங்கம் விலை குறையும்.
என்ன நடக்கும்
ஆனால், தற்போதைய சூழலில் வட்டி விகிதம் குறைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் சமீபத்தில் அமெரிக்க வேலைவாய்ப்பு ரிப்போர்ட் வெளியாகியிருந்தது. அது திருப்திகரமாக இல்லை. இதனால் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதத்தைக் குறைத்தே ஆக வேண்டும். டிரம்ப் தரப்பும் கூட வட்டி விகிதத்தைக் குறைக்கக் கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் இன்று வட்டி விகிதம் குறைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம்.
அமெரிக்க வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டால் தங்கம் விலை கணிசமாக அதிகரிக்கும். அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி 0.5% வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை ராக்கெட்டில் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதேநேரம் பணவீக்கம், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காமல் விட்டால் தங்கம் விலை கொஞ்சம் குறையலாம். ஆனால், இதற்கான வாய்ப்பு மிகக் குறைவு!
எப்போது தெரியும்
இவ்வளவு முக்கியமான அமெரிக்க மத்திய வங்கியின் இரண்டு நாள் கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் ஜெரோம் பவுல் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிப்பார். அதைப் பொறுத்தே தங்கம் விலை மாறும். இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணியளவில் ஜெரோம் பவுல் செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications