அமெரிக்க வரலாற்றில் நடக்காத ஒன்று.. ஒரே நேரத்தில் 2 லட்சம் விசாக்களை ரத்து செய்யும் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே டிரம்ப் அரசு ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பேரின் விசாக்களை ரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே இதுபோல ஒரே நேரத்தில் இவ்வளவு பேரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு சுற்றுலா மற்றும் பிஸ்னஸ் விசா பெற்று வெளிநாட்டினர் பலரும் செல்கிறார்கள். இருப்பினும், இதுபோல தற்காலிக விசா பெற்று வருவோர் அப்படியே புகலிடம் கோரி விண்ணப்பித்துவிடுகிறார்கள். இதுபோல புகலிடம் கோருவதற்காக சுற்றுலா அல்லது பிஸ்னஸ் விசா மூலம் அமெரிக்கா வருவோருக்கு எதிரான நடவடிக்கையை டிரம்ப் அரசு எடுத்துள்ளது.

2 லட்சம் விசாக்கள்
இதுபோல புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டொனால்ட் டிரம்ப் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால் 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் அதிகபட்ச விசாக்கள் ரத்து செய்யப்படும் நடவடிக்கையாக இது அமையும். அதேநேரம் இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர வாய்ப்பு அதிகம்!
டிரம்ப் அரசின் தற்போதைய திட்டத்தின்படி, 2016 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட B1 மற்றும் B2 விசாக்களில்.. அமெரிக்காவில் புகலிடம் கோரியவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படலாம். இந்த நடவடிக்கை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
B1, B2 விசா என்றால் என்ன?
B1 விசா பொதுவாக தொழில் மற்றும் வர்த்தக பயணங்களுக்காக வழங்கப்படுகிறது. B2 விசா சுற்றுலா, குடும்பத்தினரை சந்திப்பது அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த விசாக்களில் அமெரிக்கா செல்லும் சிலர், அங்கேயே தொடர்ந்து தங்குவதற்காக புகலிடம் கோரி விண்ணப்பிப்பதாக டிரம்ப் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி பிகாட் கூறுகையில், "குறுகிய கால பயணிகளாக அமெரிக்காவுக்கு வந்து பின்னர் நிரந்தரமாக தங்குவதற்காக புகலிடம் கோரும் வெளிநாட்டினரின் விசாக்களை அடையாளம் கண்டு ரத்து செய்ய நடவடிக்கை தொடங்கப்படும். எத்தனை விசாக்கள் ரத்து செய்யப்படும் என்பது முடிவில் தான் தெரிய வரும். இது ஒரு முறை மட்டுமே எடுக்கப்படும் நடவடிக்கையாக இருக்காது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
அடுத்து என்ன!
விசா ரத்து செய்யப்பட்டாலும் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்பட மாட்டார்கள். தற்போது புகலிட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் வேறு விசாவுக்கு மாற வேம்டி இருக்கும். அவர்களால் தொடர்ந்து B1 அல்லது B2 விசா வைத்திருக்க முடியாது. அதாவது வேறு விசா மாற டைம் வழங்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடந்து வருவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரம்ப்
டிரம்ப் கடந்தாண்டு அதிபராக பதவியேற்றது முதலே குடியேற்ற விதிகளை கடுமையாக்கி வருகிறார். விசாவுக்கு கூட சமூக வலைத்தள பக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடங்கி, அதிக டெபாசிட் தொகை வரை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதையே ஒட்டுமொத்தமாக நிறுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு கடந்த 18 மாதங்களில் மட்டும் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சுமார் 1.75 லட்சம் பேரின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
