அதானி குழுமம் மீதான லஞ்சப் புகாரில் விசாரணையை தொடங்கிய அமெரிக்கா.. என்ன நடக்கிறது?
வாஷிங்டன்: அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனரான அதானி மீது விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளது. அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசுர் பவர் நிறுவனம், சாதகமான நடவடிக்கைகளுக்கான இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா? என விசாரணையை தொடங்கி உள்ளது.
அமெரிக்காவின் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனரான அதானி மீது அமெரிக்க விசாரணை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள் என்றும் நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் வாஷிங்டனில் உள்ள நீதித்துறையின் மோசடி பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அதானி குழுமம், "எங்கள் தலைவருக்கு (அதானிக்கு) எதிராக நடைபெறும் எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது. மிக உயர்ந்த தரத்துடன் செயல்படும் வணிக நிறுவனமாக அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. எங்கள் நிறுவனம் இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள லஞ்ச ஒழிப்பு சட்டங்களுக்கு உட்பட்டு முழுமையாக இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசுர் பவர் நிறுவனம், சாதகமான நடவடிக்கைகளுக்கான இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா? என அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறித்து புரூக்ளின் மற்றும் வாஷிங்டனில் உள்ள விசாரணை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதேபோல் அதானி குழுமத்தின் அசூர் நிறுவனமும், இந்த செய்தி தொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை..
அதானி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், "இந்திய நிறுவனமான அதானி குழுமம் மோசமான பங்கு கையாளுதல், கணக்கு மோசடி ஆகியவற்றின் மூலமாக இந்திய மதிப்பில் 17.8 ட்ரில்லியன் (டாலரில் 218 பில்லியன்) மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து, எங்களின் இரண்டு வருட விசாரணையின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகிறோம். அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கௌதம் அதானி, கடந்த மூன்று ஆண்டுகளில் $100 பில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்பைச் சேர்த்திருக்கிறார்" என்று பெரிய அளவில் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டது.
இதனால் அதானி நிறுவனத்தின் பங்குகள் அப்படியே ஆட்டம் கண்டது. சுமார் 25 சதவீதம் வரை பங்குகள் விலை சரிந்தது. இந்திய பங்குச்சந்தையே ஆட்டம் காணும் அளவிற்கு மாறியது. அதேநேரம் அதானி குழுமம் ஹிண்டர்பர்க்கின் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்தது. மேலும் பங்குகள் சரிவில் இருந்தும் அதானி குழுமம் பெருமளவில் மீண்டது.
அண்மையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அதானி பேசும் போது, "கடந்த ஆண்டு எங்கள் மீது முறைகேடு சார்ந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனாலும் நாங்கள் அதனை திறம்பட எதிர்கொண்டோம். நிறுவனத்தின் நற்பெயரை காத்தோம். அதேநேரத்தில் எங்களது செயல்பாட்டில் கவனம் வைத்தோம். அதில் வெற்றியும் கண்டோம்" என்றார்.
இதனிடையே அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவது ஒருபுறம் எனில், அதானி குழும நிறுவனங்களுடன் அமெரிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கடந்த ஆண்டு, அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள துறைமுக முனையத்திற்காக அதானியின் நிறுவனத்திற்கு 553 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்க்கும் நோக்கில் இந்த நிதியுதவியை அமெரிக்கா வழங்கியதாக ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.
ப்ளூம்பெர்க் தனது செய்தி அறிக்கையில், அதானி நிறுவனம் மீது விசாரணை தற்போது தீவிரமாக உள்ளது,. அதேநேரம் அதானி நிறுவனம், கௌதம் அதானி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவிக்காமல் நீதித்துறை தனது விசாரணைகளை தொடரலாம். அவரது நிறுவனம் மற்றும் அஸூர் ஆகியோர் நீதித்துறையால் தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படவில்லை. எனவே இதுபோன்ற விசாரணைகள் எப்போதும் வழக்குகளுக்கு வழிவகுக்காது என்று கூறியுள்ளது.
அதேநேரம் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் (FCPA) அமெரிக்க முதலீட்டாளர்கள் அல்லது சந்தைகளுடன் சில தொடர்புகள் இருந்தால், வெளிநாட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர அமெரிக்கா வழக்கறிஞர்களை அனுமதிக்கிறது. இந்த சூழலில் அதானி குழுமம் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யவில்லை எல் அமெரிக்க முதலீட்டாளர்களை மட்டும் கொண்டிருக்கிறது என்று ப்ளூம்பெர்க் கூறியுள்ளது












Click it and Unblock the Notifications