இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிய பைடன்.. திடீர் பதற்றம்! என்னாச்சு
வாஷிங்டன்: இஸ்ரேலுக்குப் பக்க பலமாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்வது அமெரிக்கா தான் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் பைடன் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இரு தரப்பு உறவுகள் சுமுகமாக இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். அங்கு இஸ்ரேலுக்குப் பக்கபலமாக இருப்பது அமெரிக்கா தான்.. ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல உதவிகளைச் செய்து வருகிறது.

புத்தகம்: ஆனால், கடந்த சில மாதங்களாக இரு தரப்பிற்கும் இடையேயான உறவு மோசமடைந்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே என்ன மாதிரியான உறவு இருந்தது என்பது குறித்து அமெரிக்காவின் பிரபல ஊடகவியலாளர் பாப் உட்வார்ட் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
வார் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம் இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளது. அதில் தான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் பைடன் காதிலேயே கேட்க முடியாத கெட்ட கெட்ட வார்த்தைகளில் பைடன் திட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.
கடுப்பான பைடன்: அந்த புத்தகத்தில் உள்ள சில முக்கிய குறிப்புகளைப் பிரபல அமெரிக்க ஊடகமான சிஎன்என் வெளியிட்டுள்ளது. அதில் தான் அந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் காசாவின் முக்கியமான மற்றும் மக்கள் அதிகம் வாழும் நகரமான ரஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியானது. அப்போது அமெரிக்க அதிபர் பைடன் நேரடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு போன் போட்டுள்ளார்.
அந்த தொலைப்பேசி அழைப்பின் போது பைடன் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாராம். காசா-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் இஸ்ரேல் திட்டம் என்ன என்பது குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு ரஃபாவில் தாக்குதலை நடத்துவது தவிர வேறு வழியில்லை என்று நெதன்யாகு கூறியிருக்கிறார். இதைக் கேட்டுக் கடுப்பான பைடன், "உங்களிடம் எந்த உத்தியும் இல்லை. சும்மா தாக்குதல் நடத்த வேண்டாம்!" எனக் கூறியிருக்கிறார்.
தாக்குதல்: பைடன் எச்சரித்தும் கூட இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதலை நடத்தியது. குறிப்பாக மே மாதம் ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதலைக் கணிசமாக அதிகரித்து இருந்தது. இந்தளவுக்கு இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என அமெரிக்கா கூட எதிர்பார்க்கவில்லையாம். இதனால் அதிபர் பைடன் கவலையடைந்தார்,

குறிப்பாகக் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ராணுவத் தளபதியான ஃபுவாட் ஷுக்ரைக் என்பவரை இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொன்றது. கடந்த 1982ல் பெய்ரூட்டில் இருந்த சுமார் 21 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த குண்டுவெடிப்பு தாக்குதலைத் திட்டமிட்டவரே இந்த ஃபுவாட் ஷுக்ரைக் தான். அவரை இஸ்ரேல் கொன்று இருந்தது.
கெட்ட வார்த்தையில் திட்டிய பைடன்: ஆனால், திடீரென இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லையாம். இந்தத் தாக்குதல் செய்தி கிடைத்த உடனே நெதன்யாகுவுக்கு கால் செய்த அமெரிக்க அதிபர் பைடன் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும், "உங்களுக்கு என்ன தான் பிரச்சினை? இஸ்ரேல் மீதான உலக நாடுகளின் பார்வை மாறுகிறது.. அது உங்களுக்குப் புரிகிறதா.. உங்களை ஏதோ ரவுடி நாடாகக் காட்டிக் கொள்ள விரும்புகிறீர்களா" என்று ஆவேசமாகக் கத்தி இருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே பிளவு ஏற்பட்டதையே இந்த உரையாடல் காட்டுவதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த ஃபோன் கால் முடிந்த பிறகும் கூட வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் பேசும் போது நெதன்யாகுவை பைடன் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும், நெதன்யாகு ரொம்ப மோசமான ஆள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது பைடன் கடும் விரக்தியில் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்: இதற்கு முன்பும் கூட இஸ்ரேல் பிரதமர் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் சில மோசமான கருத்துகளைச் சொன்னதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், அதை வெள்ளை மாளிகை தொடர்ந்து மறுத்தே வந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகை மறுத்தாலும் கூட, இந்தச் சம்பவங்கள் நடந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா தீவிரமாக முயல்கிறது. ஆனால், இஸ்ரேல் அதைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இதனால் இரு தரப்பு உறவு மோசமடைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications