"200% வரி விதிக்க போகிறேன்.." பிரான்ஸுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப்.. தடாலடி அறிவிப்பு.. என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் வரிகளை அறிவித்து வருகிறார். இதற்கிடையே பிரான்ஸ் நாட்டின் மதுபானங்கள் மற்றும் ஷாம்பெயின் மீது 200 சதவீத வரி விதிப்போம் என்று அச்சுறுத்தியுள்ளார். டிரம்ப்பிற்கு பிரான்ஸ் நாட்டின் மீது திடீர் கோபம் ஏன்.. இதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்க அதிபரான டிரம்ப் சர்வதேச அளவில் தொடர்ச்சியாகக் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். உலக வல்லரசை வழிநடத்தும் பதவியில் இருக்கிறோம் என்பதை உணராத டிரம்ப் வாய்க்கு வந்ததைப் பேசி வருகிறார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அப்படியொரு சம்பவத்தை தான் அவர் இப்போது மீண்டும் செய்திருக்கிறார்.

அதாவது காசாவில் அமைதியைக் கொண்டு வரவும் அங்கு மீண்டும் புனரமைப்புப் பணிகளையும் மேம்படுத்த டிரம்ப் ஒரு அமைதி வாரியத்தை அறிவித்தார். இந்த அமைதி வாரியத்தில் சேர உலகின் பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதன் மூலம் காசா சீரமைப்பு பணிகளை வேகப்படுத்த முடியும் என டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப்
இதற்கிடையே இந்த அமைதிக் குழுவில் சேர பிரான்ஸ் மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த டிரம்ப், பிரான்ஸ் நாட்டின் மதுபானங்கள் மற்றும் ஷாம்பெயின் மீது 200 சதவீத வரி விதிப்போம் என்று அச்சுறுத்தியுள்ளார். இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனக்கு அனுப்பிய தனிப்பட்ட மெசேஜ்ஜையும் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் பகிர்ந்திருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா முன்மொழிந்த இந்த அமைதிக் குழு, போரால் பாதிக்கப்பட்ட காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதை மேற்பார்வையிடுவதற்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால், அதன் அதிகாரம் பாலஸ்தீனப் பிராந்தியத்திற்கு வெளியே அதன் பங்கு என்னவாக இருக்கும் என்பதை வரையறுக்கவில்லை. இதனால் காசாவை தாண்டியும் மற்ற விவகாரங்களிலும் அது தலையிடுமோ எனப் பலரும் சந்தேகம் கிளம்பியிருந்தனர். இந்தச் சூழலில் தான் அந்தக் குழுவில் சேர பிரான்ஸ் அதிபர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
200% வரி
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானைக் குறிப்பிட்ட டிரம்ப், "அவருடைய ஒயின்கள் மற்றும் ஷாம்பெயின் மீது நான் 200 சதவீதம் வரி விதிப்பேன். அதன் பிறகு அவராகவே அமைதிக் குழுவில் இணைவார். ஆனால் அவர் கட்டாயம் வர வேண்டும் என அவசியமில்லை" என்றார். மேலும், மேக்ரான் தனக்கு அனுப்பிய ஒரு தனிப்பட்ட மெசேஜ்ஜையும் டிரம்ப் பதிவிட்டார்.
அதில் ஈரான் மற்றும் சிரியா பிரச்சனைகளில் அமெரிக்காவுடன் உடன்படுவதாக மேக்ரான் தெரிவித்துள்ளார். அதேநேரம் கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் என்ன செய்கிறார் என்பதே தனக்குப் புரியவில்லை என்றும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். அதேபோல இன்னொரு மெசேஜ்ஜில் டாவோஸில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின்போது ஜி7 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன் மீட்டிங்கை ஏற்பாடு செய்யத் தயாராக இருப்பதாகவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
எதிர்காலத்தில் சீனா அல்லது ரஷ்யா நாடுகள் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முயன்றால் அதைத் தற்காக்கும் திறன் டென்மார்க்கிடம் இல்லை என்றும் இதன் காரணமாகவே கிரீன்லாந்தைத் தங்களுக்குத் தர வேண்டும் என டிரம்ப் சொல்கிறார். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் விளக்கமளித்திருந்த நிலையில், அதை முட்டாள்தனமானது என பிரான்ஸ் வெளியுறவுத் துறை சாடியிருந்தது.
நக்கல்
அவர்கள் தங்கள் ட்விட்டரில், "எப்போதாவது தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வீரர்கள் வருவார்கள்.. ஆனால், இப்போதே வீட்டை எரித்துவிடுவது நல்லது.. எப்போதாவது சுறா தாக்கக்கூடும்.. எனவே, இப்போதே உயிர்காப்பாளரை சாப்பிடுவது நல்லது. எப்போதாவது ஒரு விபத்து நடந்தால், சேதம் ஏற்படும்.. எனவே, இப்போதே காரை மோதிவிடுவது நல்லது என்பதற்கு இணையாக இந்த ஐடியா இருக்கிறது" என்று பதிவிட்டு இருந்தது.
இந்த போஸ்ட் டிரம்ப் தரப்பைக் கோபப்படுத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே இப்போது பிரான்ஸ் மதுபானங்கள் மற்றும் ஷாம்பெயின் மீது 200 சதவீத வரி விதிப்போம் என டிரம்ப அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications