ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்த டிரம்ப்.. லிஸ்டில் சிக்கிய பிரபல இந்திய தொழிலதிபர்!
வாஷிங்டன்: அணு ஆயுதத் தடைச் சட்ட விவகாரத்தில் ஈரான் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கிடையே ஈரான் மீது மேலும் பிரஷர் போடும் வகையில் அமெரிக்கா இப்போது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. பல்வேறு கப்பல்கள், நிறுவனங்கள், தனி நபர்கள் மீது இந்தப் பொருளாதாரத் தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் இந்திய நிறுவனமும் சிக்கியுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் சமீபத்தில் தான் மோசமான உள்நாட்டு மோதல் ஏற்பட்டிருந்தது. ஈரான் அரசுக்கு எதிராக மிகப் பெரிய கலகம் வெடித்தது. இதில் பல நூறு பேர் உயிரிழந்த நிலையில், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். அதில் இருந்து மீண்டு இப்போது தான் ஈரான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது.

பொருளாதாரத் தடைகள்
இதற்கிடையே ஈரான் மீது மேலும் பிரஷர் போடும் வகையில் அமெரிக்கா இப்போது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. 14 கப்பல்கள், 15 நிறுவனங்கள் மற்றும் இரு தனிநபர்கள் மீது இந்தப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓமானில் இரு நாடுகளிடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தை முடிந்த சில நிமிடங்களிலேயே இந்தப் பொருளாதாரத் தடை குறித்த அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் கூறுகையில், "ஈரான் தனது எண்ணெய் வருவாயை உள்நாட்டில் ஒடுக்குமுறைக்கும் சர்வதேச மோதலுக்கும் பயன்படுத்துகிறது,. டிரம்ப் நிர்வாகத்தின் அதிகபட்ச பிரஷர் பாலிசி கீழ், ஈரான் ஆட்சியின் சட்டவிரோத எண்ணெய், பெட்ரோ கெமிக்கல் ஏற்றுமதியைக் குறைப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்திய தொழிலதிபர்
மொத்தம் 14 கப்பல்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இந்த கப்பல்கள் ஈரான் பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல் பொருட்களை முறைகேடாகக் கடத்தும் கப்பல் படை போலச் செயல்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மோசடி செய்து ஈரான் கச்சா எண்ணெய் மூன்றாம் நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. துருக்கி, இந்தியா, அமீரக நாடுகளின் கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன..
இந்தியாவைச் சேர்ந்த "எலிவேட் மரைன் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்" நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் ஆகாஷ் அனந்த் ஷிண்டே ஆகியோர் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும் அதைத் தடுக்கவே தான் முயன்று வருவதாகவும் டிரம்ப் கூறி வருகிறார். அணு ஆயுத தடை தொடர்பான ஒப்பந்தம் போட ஈரான் முன்வர வேண்டும் என பிரஷர் கொடுக்கும் டிரம்ப், அதற்காகவே இந்த தடைகளை அறிவித்து வருகிறார். அதேநேரம் டிரம்ப் இதுபோன்ற பொருளாதாரத் தடைகளை அறிவிப்பது இது முதல்முறை இல்லை. 2016- 2020 வரை அவர் முதல்முறை அதிபராக இருந்தபோதே ஈரான் எண்ணெய் வாங்குவதைப் பிற நாடுகள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருகிறது.
ஓமனில் நடந்த பேச்சுவார்த்தை
கடந்த சில வாரங்களாகவும் அவர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்தச் சூழலில் தான் ஓமானில் அமெரிக்காவின் மூத்த தூதர்களுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர், அணுசக்தி திட்டம் குறித்துப் பேசினார். பேச்சுவார்த்தை திருப்திகரமாகப் போனதாகவும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தங்கள் தலைமையை ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் பேச்சுவார்த்தை சுமுகமகவே போனதாக ஈரான் கூறியிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை முடிந்த சில நிமிடங்களில் அமெரிக்கா இந்த தடைகளை அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications