டிரம்ப் மீது கொலை முயற்சி? கையில் ஆயுதத்தோடு இறங்கிய மர்ம நபர்.. சுட்டு கொன்ற சீக்ரெட் சர்வீஸ்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புளோரிடா மார்-ஏ-லாகோ எஸ்டேட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஒருவர், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியுடன் உள்ளே வந்த அந்த நபரை நொடிப்பொழுதில் சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் சுட்டுக் கொன்றனர். டிரம்ப் மாளிகைக்குள் ஆயுதமேந்திய நபர் நுழைந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்கள் எப்போதும் வெள்ளை மாளிகையில் தான் இருப்பார்கள். அதேபோல டிரம்ப்பும் வெள்ளை மாளிகையில் தான் வசித்து வருகிறார். அதேநேரம் வீக் எண்ட்களில் டிரம்ப் தனது சொந்தக் குடியிருப்பிற்கு சென்றுவிடுவார். அது புளோரிடாவில் அமைந்துள்ளது. புளோரிடா மார்-ஏ-லாகோ எஸ்டேட் என்று அதை அழைப்பார்கள்.

மர்ம நபர்
இந்த மார்-ஏ-லாகோ எஸ்டேட்டுக்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர் நுழைந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதுவும் கையில் ஷாட்கன் வகைத் துப்பாக்கி மற்றும் எரிபொருளுடன் அந்த நபர் உள்ளே நுழைந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிபரின் குடியிருப்பு என்பதால் அங்கு சீக்ரெட் சர்வீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அந்த நபரைச் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் நடந்தபோது அதிபர் டிரம்ப் அங்கு இல்லை.
சீக்ரெட் சர்வீஸ்
இந்தச் சம்பவத்தை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குலியேல்மி உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இன்று அதிகாலை மார்-ஏ-லாகோ பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஒருவர், அமெரிக்க சீக்ரெட் சர்வீல் ஏஜெண்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்" என அவர் பதிவிட்டார். உள்ளூர் நேரப்படி இந்தச் சம்பவம் அதிகாலை 1.30 மணிக்கு நடந்துள்ளது.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர், அத்துமீறி நுழைந்ததால் சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகத் துணை அதிகாரி அவரை சுட்டு கொன்றனர். அந்த நபர் யார்.. அவரது பெயர் என்ன.. அவர் எதற்காக இதுபோல செய்தார் என்பது குறித்த விவரங்களை சீக்ரெட் சர்வீஸ் வெளியிடவில்லை. அதேநேரம் இந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரைத் தவிரக் காயமடையவில்லை என்பதை சீக்ரெட் சர்வீஸ் உறுதி செய்துள்ளது.
விசாரணை
FBI, அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ், பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஆகியவை இது தொடர்பாக விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் விசாரணை முடியும் வரை விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபரான டிரம்ப்பை குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்தாண்டு இதுபோலத் தான் டிரம்ப் கோல்ப் ஆடும் பகுதிக்குள் ஒருவர் ஆயுதங்களோடு நுழைந்தார். அதேபோல பிரச்சாரத்தின் சமயத்தில் பென்சில்வேனியாவில் 20 வயது மேத்யூ க்ரூக்ஸ் என்பவர் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
முதல்முறை இல்லை
டிரம்ப் பேசிக்கொண்டு இருக்கும்போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதில் ஒரு குண்டு அவரது காதில் உரசிச் சென்றது. அதுவே டிரம்பின் 2.0க்கு திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு முன்பு வரை மக்களிடையே அவருக்குப் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்த நிலையில், அதன் பிறகே நிலைமை மாறியது. குறிப்பாக ரத்தம் சொட்டச் சொட்ட அவர் மக்களைப் பார்த்து நிற்கும் போட்டோ தேர்தலை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. தேர்தலிலும் வென்று அவர் ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications