டெல்லி குண்டுவெடிப்பு.. நிச்சயம் தீவிரவாத தாக்குதல்தான்! அடித்து சொல்லும் அமெரிக்கா
வாஷிங்டன்: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவும் இதை திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதி செய்திருக்கிறது.
நவ.10ம் தேதி செங்கோட்டை அருகே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், சிக்னலில் நின்று கொண்டிருந்த ஹுண்டாய் i20 கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது.

வெடித்து சிதறிய கார், சிஎன்ஜி கேஸ் சிலிண்டரால் இயக்கப்பட்டதாகவும், கேஸ் கசிவு ஏற்பட்டு கூட வெடிவிபத்து நடந்திருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில், இது முழுக்க முழுக்க தீவிரவாத தாக்குதல்தான் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இதனையடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், இதை தீவிரவாத தாக்குதல் என்று உறுதி செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இது தெளிவான பயங்கரவாதத் தாக்குதல். அதிக வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் வெடித்ததில் பலர் உயிரிழந்தனர். இந்தியா இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மிகவும் நிதானமாகவும், எச்சரிக்கையாகவும், தொழில்முறை ரீதியாகவும் மேற்கொண்டு வருகிறது. இது பாராட்டுக்குரியது. அவர்கள் மிகச் சிறந்த முறையில் விசாரணை செய்கிறார்கள். உண்மைகள் கிடைத்ததும் அதை வெளியிடுவார்கள். நாங்கள் உதவி செய்ய முன்வந்தோம், ஆனால் இந்த விசாரணைகளில் அவர்கள் மிகவும் திறமையானவர்கள் என்பதால் எங்கள் உதவி தேவையில்லை என நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக டாக்டர் உமர் உன் நபி அடையாளம் காணப்பட்டிருக்கிறார். ஆனால் அவருடன் பலரும் தீவிரவாத செயலுக்கு திட்டமிட்டிருக்கின்றனர். உமர் மற்றும் அவரது கூட்டாளிகள் பல நகரங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்புகளை நடத்த i20 மற்றும் ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட பல கார்களை தயார் செய்து வந்ததாக உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 8 பேர் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்புகளை திட்டமிட்டதாகவும், ஒவ்வொரு ஜோடியும் ஒரு குறிப்பிட்ட இலக்கு இடத்திற்கு ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 8 பேரில் ஒருவர்தான் டாக்டர் உமர் உன் நபி. இவர் ஹுண்டாய் i20 கார் வெடிப்பில் கொல்லப்பட்டிருக்கிறார். வெடித்து சிதறிய காரின் அருகே இருந்த உடல் பாகங்களை வைத்து நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications