இந்தியாவின் பொருளாதாரத்தை டிரம்ப் அழித்துவிடுவாராம்! திடீரென வாய்ஸை மாற்றும் அமெரிக்கா? என்ன மேட்டர்
வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் டிரம்ப் இப்போது தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் ரஷ்யா மீது கடும் அழுத்தம் போட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அடுத்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது டிரம்ப் கடுமையான வரிகளை விதிப்பார் என்று அமெரிக்க எம்பி லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார். இதில் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் இப்போது ரஷ்யா உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயன்று வருகிறார். ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் புதினை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு டிரம்ப் வரிகளை விதிக்க இருக்கிறார்.

வரிகளை விதிப்பார்
இது தொடர்பாக எம்பி லிண்ட்சே கிரஹாம் கூறுகையில், "ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் மீது டிரம்ப் வரிகளை விதிப்பார். இந்த மூன்று நாடுகளுமே ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதத்தை வாங்குகின்றன. இதுவே உக்ரைன் மீதான போருக்கு நிதியளிக்க உதவுகிறது. ரஷ்ய அதிபர் புதினுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் விதமாக, இந்த நாடுகளிலிருந்து வரும் எண்ணெய் தொடர்பான இறக்குமதிகள் மீது 100 சதவீதம் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். புதினுக்கு உதவும் நாடுகளைத் தண்டிக்கும் விதமாக அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுப்பார்.
ரஷ்ய அதிபர் புதின் புடின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டே தீர வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை. ஆனால் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் சாய்ஸ் இருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரம் வேண்டுமா அல்லது புதினுக்கு உதவுவதா என்ற ஒரு தேர்வைச் செய்ய வேண்டும். அவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தையே தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.
சோவியத் ஒன்றியத்தை உருவாக்கும் முயற்சி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர் பிற நாடுகளை ஆக்கிரமிப்பதன் மூலம் மீண்டும் சோவியத் யூனியனை உருவாக்க முயல்கிறார். புதின் மற்ற நாடுகளை அபகரிக்க நினைக்கிறார். 1990-களின் நடுப்பகுதியில், உக்ரைன் இறையாண்மையை ரஷ்யா மதிக்கும் என்ற வாக்குறுதியாலேயே 1,700 அணு ஆயுதங்களைக் கைவிட்டது. ஆனால் புதின் அந்த வாக்குறுதியை மீறிவிட்டார். புதின் நிறுத்த போவதில்லை. யாராவது ஒருவர் தலையிட்டு புதினை நிறுத்த வைக்க வேண்டும்.
அமெரிக்க ஆயுதங்கள்
நீங்கள் டிரம்ப்பை குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள், இது உங்களுக்கு மிகப்பெரிய தவறு. இதன் விளைவாக உங்கள் பொருளாதாரம் தொடர்ந்து நசுக்கப்படும். உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் மூலம் உக்ரைன் புதினை எதிர்த்துப் போராட முடியும். டொனால்டு ட்ரம்ப் அதிபராக இருந்தபோது புதின் தவறான கணக்குப் போட்டு மாட்டிக் கொண்டார். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருவதால், புதினை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு இது உதவும்.
அழித்துவிடுவோம்
சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெய்யை வாங்கி, போரை நீடிக்கச் செய்தால், அந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் அமெரிக்கா அழித்துவிடும். உலக நாடுகளின் நலனைப் புறக்கணித்துவிட்டு, ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெய்யை வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. டிரம்ப் இந்த விளையாட்டை வெறுக்கிறார்" என்றார். மேலும், புதின் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசமான அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications