"அடுத்த மாதம் சம்பளம் வராது.." அமெரிக்காவில் ஒரு வங்கி திவாலானதால்.. உலகெங்கும் ஏற்படும் சிக்கல்கள்
அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி திவாலாகியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருக்கும் எஸ்விபி வங்கி திவாலாகியுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமின்றி உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியரையும் கூட பாதிக்கும்.
அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதியைக் கையாளும் வங்கி தான் எஸ்விபி- அதாவது சிலிகான் வேலி பேங்க்.. அமெரிக்காவில் சிலிகான் பள்ளத்தாக்கில் தான் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படும்.
இதன் காரணமாகவே எஸ்விபி இந்த பெயரைப் பெற்றது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 1983இல் நிறுவப்பட்ட சிலிக்கான் வேலி பேங்க், அந்நாட்டில் இருந்த 16ஆவது மிகப் பெரிய வங்கியாக இருந்தது.

சிலிகான் வேலி வங்கி
ஒரே நேரத்தில் இந்த வங்கியில் பணம் வைத்திருந்த பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றதால் வங்கி இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டது. புதிய டெபாசிட்களை வங்கியால் பெற முடியாமல் போகவே.. புது பங்குகளை வெளியிட்டும், பத்திரங்களை விற்றும் நிலைமை சமாளிக்க முயன்றது. இது நிலைமையை மேலும் மோசமாக்க வங்கியின் பங்குகளின் மதிப்பு 60% வரை சரிந்தன. இதன் காரணமாக வங்கி திவாலானது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கலுக்குப் பிறகு அமெரிக்காவில் வங்கி ஒன்று திவாலானது இதுவே முதல்முறையாகும். எஸ்விபி பெயருக்கு சிலிக்கான் வேலி பேங்க் என்று அழைக்கப்பட்டாலும் கூட.. அதன் சரிவு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா ஒயின் தயாரிப்பாளர்கள் முதல் உலகின் ஏதோ மூலையில் இருக்கும் ஸ்டார்ட்அப்கள் வரை, எஸ்விபி திவாலானதால் தங்கள் நிதியை எப்படி நிர்வகிப்பது என்பது தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். இப்போது இந்த வங்கி திவாலாகியுள்ளது, பிஸ்னஸ்மேன்களுக்கு மட்டுமில்லை.. தொழிலாளர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

கலிபோர்னியா கவர்னர்
இது தொடர்பாக கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசோம் கூறுகையில், "முடிந்தவரை விரைவாக நிலைமையை மேம்படுத்த வேண்டும். அப்போது தான் பல லட்சம் பேரின் வேலைகள், வாழ்வாதாரம், பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியும்" என்றார். அமெரிக்கா சட்டப்படி வங்கியில் $250,000க்கும் குறைவாக டெபாசிட் செய்திருந்தால்.. ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வழங்கும் காப்பீட்டைப் பெறலாம்.. இதைக் காட்டிலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில் வங்கியை யாரிடமாவது விற்கும் முயற்சியில் அந்நாட்டின் கண்காணிப்பு அமைப்பு இறங்கியுள்ளது.

பிரிட்டன்
எஸ்விபி வங்கி திவாலாகியுள்ளது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எஸ்விபி-இன் பிரிட்டன் பிரிவு அனைத்து வர்த்தக நடவடிக்கையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இங்கிலாந்து சிலிக்கான் வேலி வங்கியை அதன் திவால் நடைமுறையில் சேர்க்கும் என்று பிரிட்டன் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி 170,000 பவுண்டுகள் தங்கள் கணக்கில் வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு முழு பணம் கிடைக்கும். இந்த எஸ்விபி வங்கி திவால் என்பது பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் கடுமையாகப் பாதிக்கிறது.

ஒயின் நிறுவனம்
பிரிட்டன் எஸ்விபி சொத்துக்களை விற்று வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைச் செலுத்தும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்டார்ட் அப் நிறுவனங்களை மட்டும் பாதிக்கவில்லை. மற்ற துறைகளையும் கணிசமாகப் பாதிக்கிறது.கலிபோர்னியா முக்கிய பிஸ்னஸ்களில் ஒன்றான ஒயின் சந்தையையும் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. இந்த எஸ்விபி வங்கிகள் தான் 1990கள் முதலே திராட்சைத் தோட்டங்களுக்குக் கடன் வழங்குநராக உள்ளது. இப்போது வங்கி திவாலாகியுள்ளது அவர்களையும் சிக்கலில் தள்ளுகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
அமெரிக்காவின் சியாட்டிலில் இயங்கி வரும் ஷெல்ப் இன்ஜின் நிறுவனமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தனது அனைத்து நிதியையும் எஸ்விபி வங்கியில் தான் வைத்திருந்தார்கள். இப்போது எஸ்விபி வங்கி திவாலாகியுள்ள நிலையில், இக்கட்டான சூழலில் இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்நாட்டு சட்டப்படி $250,000 பெறும் முயற்சியில் இப்போது அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அது சீக்கிரம் கிடைத்தாலும் கூட நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக காலம் ஊதியம் தர இது போதாதது என்றே கூறப்படுகிறது. இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.

சம்பளம் தர முடியாது
எஸ்விபி வங்கி திவாலானது இப்படி உலகெங்கும் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் பாதிக்கும். அமெரிக்க அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். நிலைமை சரியாகவில்லை என்றால் அடுத்த மாதம் சம்பளம் தரவே பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் திணறும். இது ஆட்குறைப்பிற்கு வித்திட்டால்.. நிலைமை மேலும் மோசமாகும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications