US Tariff: இந்தியாவுக்கு எதிராக போரை தொடங்கிய டிரம்ப்.. அமெரிக்காவின் ‛தி நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் வர்ணிப்பு
வாஷிங்டன்: சீனாவும், அமெரிக்காவும் பரம எதிரிகளாக உள்ளன. இதனால் சீனாவை சமாளிக்க அதன் அண்டை நாடாக உள்ள நம் நாட்டை டிரம்ப் ஆதரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சீனாவை விட அதிகமாக நம் நாட்டுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்துள்ளார். இதன்மூலம் ஜனநாயக நாடுகளான நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உள்ளது. இதற்கிடையே தான் டிரம்பின் இந்த வரி விதிப்பை இந்தியா மீதான போராக வர்ணித்து அமெரிக்காவின் பிரபல ஊடகமான ‛தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் 25 சதவீத வரியை கடந்த 1ம் தேதி விதித்தார். தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக நேற்று 2வது கட்டமாக 25 சதவீத விதித்தார் டிரம்ப். இதனால் இந்தியா மீது மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
இதில் முதற்கட்டமாக இன்று (ஆகஸ்ட் 7) முதல் 25 சதவீத வரி அமலுக்கு வருகிறது. அதன்பிறகு 21 நாட்கள் கழித்து 2வது கட்டமாக 25 சதவீத வரி செயல்பாட்டுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் நல்ல உறவு வைத்துள்ள நாடுகளில் இந்தியா ஒன்றாக உள்ளது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் - நரேந்திர மோடி இடையே நல்ல உறவு வந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்து டிரம்ப் இப்படி 50 சதவீத வரி போட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் பிரபல ஊடகமாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா மீதான போரை அமெரிக்கா தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற காலத்தில் சீனாவின் சவாலை எதிர்கொள்ள இந்தியாவை நல்ல நட்பு நாடாக அமெரிக்கா வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய வரி விதிப்பு இந்தியாவை எதிரியாக சித்தரித்துள்ளது. மேலும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியாவை வைத்துள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம் மற்றும் எல்லைகளை தாண்டி மிகப்பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் - மோடி சந்தித்தனர். அப்போது இந்தியா - அமெரிக்காவின் கூட்டாண்மை உலகின் மிகவும் மேம்பட்ட பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் டிரம்பும் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும்போது மெகா வளர்ச்சி ஏற்படும் என்று கூறினார். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
டிரம்ப் - மோடி சந்திப்பின்போது இருநாடுகளும் சேர்ந்து சீனாவின் கதையை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீனா மக்கள் தொகையில் இந்தியாவுக்கு போட்டியாக உள்ளது. அதேபோல் பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக உள்ளது. இதனால் இருநாடுகளும் சீனாவுக்கு எதிராக கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் டிரம்ப் இருந்தார். தற்போது அந்த திட்டத்தை கைவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி 50 சதவீத வரி விதித்துள்ளதோடு, இந்திய பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று விமர்சனம் செய்துள்ளார். கடந்த ஜூலை 30 ம் தேதி இந்தியப் பொருளாதாரம் செத்துப் போனது என டிரம்ப் கூறினார். அதன்பிறகு தொடர்ந்து இந்தியா மீதான தாக்குதலை அவர் முன்னெடுத்தார்.
இந்த வரி விதிப்பு இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் சுமார் 130 பில்லியன் டாலராகும். மருந்துப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மின் சாதனங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் உள்ளிட்டவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றது. .
அதேபோல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை தொடங்கின. கொரோனா காலத்துக்கு பிறகு முதலீடுகள் அதிகரித்தது. சீனாவை மிரட்டும் வகையில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டன. இந்தியாவில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை, அரசியல் சூழல் உள்ளிட்டவை அதிக முதலீடுகளை ஈர்த்தது. ஆனால் தற்போதைய வரி விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பல மாத வர்த்தக பேச்சுவார்த்தைகளை கேள்விக்குறியாக்கியுள்ளன. மேலும் அமெரிக்கா வரி விதிப்பின் மூலமாக இந்தியா மீது புதிய போரை தொடங்கி உள்ளது. இது வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மத்தியில் நம்பிக்கையை சீர்க்குலைத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கூட அமெரிக்கா - இந்தியா வர்த்தக விவகாரத்தில் சில தடங்கல்கள் இருந்தாலும் உலகளாவிய பிரச்சனை காரணமாக இருநாடுகளும் ஒருமித்த கருத்தில் உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது டிரம்பின் இந்த 50 சதவீத வரி விதிப்பு இருநாடுகள் இடையேயான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications