"எல்லாரையும் கொல்ல முடியாது!" நீண்ட கால நண்பனை எதிர்க்கும் அமெரிக்கா.. இஸ்ரேலுக்கு வார்னிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வளைகுடாவில் நிலவி வந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஈரான் உடன் அமெரிக்கா ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான மற்றும் நேரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்..

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த வளைகுடா போரால் உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூழலில், இப்போது அது இயல்பு நிலைக்குத் திரும்பும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.

US warns Israel America Iran Israel Trump

அமெரிக்கா- ஈரான்

பல மாதங்களாக நீடித்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் அமெரிக்காவும் ஈரானும் இந்த இடைக்கால ஒப்பந்தத்தைச் செய்துள்ளன. இது ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் போன்றது மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் ஒரு நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் அமெரிக்கா இதைப் பார்க்கிறது.

இஸ்ரேல் எதிர்ப்பு

இருப்பினும், இஸ்ரேல் இதை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. இஸ்ரேல் அமைச்சர்கள் இந்த ஒப்பந்தத்தை 'ஆபத்தானது' என்று கருதுகின்றனர். இந்த ஒப்பந்தம் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைத் தடுக்கத் தவறிவிட்டது என்றும் ஈரானின் ஏவுகணைத் திறனைக் கட்டுப்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்கள். மேலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை எடுப்பதை இந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது என்பதும் அவர்கள் வாதமாக இருக்கிறது.

குறிப்பாக ஈரானை 21-ஆம் நூற்றாண்டின் நாஜிக்கள் என்று குறிப்பிடும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-கிவிர், அவர்களை ராணுவ ரீதியாக மட்டுமே ஒடுக்க வேண்டும் என்று வாதிடுகிறார். இஸ்ரேல் அமைச்சர்களின் விமர்சனத்தால் ஆத்திரமடைந்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், சில காட்டமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

கண்டிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலை எச்சரித்துள்ள ஜேடி வான்ஸ், "உங்கள் நாட்டின் மக்கள் தொகை வெறும் 90 லட்சம் தான். ஒவ்வொரு தேசிய பாதுகாப்பு பிரச்சனைக்கும் எதிரிகளைக் கொல்வதன் மூலம் மட்டுமே தீர்வு கண்டுவிட முடியாது.. உலகிலேயே இஸ்ரேல் மீது அனுதாபம் கொண்ட ஒரே தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும்தான். உங்கள் வசம் இருக்கும் ஒரே சக்திவாய்ந்த நண்பனை (அமெரிக்காவை) நீங்கள் ஏன் விமர்சிக்கிறார்கள்? இஸ்ரேலைப் பாதுகாக்கும் ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க வரிப்பணத்தில் உருவானவை என்பதை மறக்க வேண்டாம்.. ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறது" என்றார்.

மேலும், சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதல்களை வான்ஸ் கண்டித்தார். இத்தனை காலம் இஸ்ரேல் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்கா ஆதரவு கொடுத்து வந்த நிலையில், இப்போது அந்நாட்டின் துணை அதிபரே இஸ்ரேலை வெளிப்படையாகக் கண்டித்துள்ளார்.

ஏற்க முடியாது

இது தொடர்பாக அவர் மேலும், "அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது. இது அமெரிக்கா முன்னெடுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையைப் பாதிக்கிறது. லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணைகளை வீசக்கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல இஸ்ரேல் லெபனானுக்குள் புகுந்து காட்டுத்தனமாக செயல்படக்கூடாது என்பதும் முக்கியம்" என்று அவர் கூறினார்.

அதாவது ஈரான் உடனான இந்த ஒப்பந்தத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக அமெரிக்கா கருதுகிறது. என்ன தான் இஸ்ரேல் நட்பு நாடாக இருந்தாலும் இதற்கு முட்டுக்கட்டை போடாமல் ஒத்துழைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+