ஆட்சியை கலைத்தாலும்.. அவ்வளவு சீக்கிரம் வெனிசுலாவில் கால் வைத்துவிட முடியாது! சிக்கலில் அமெரிக்கா
வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ததன் மூலம், அந்நாட்டின் எண்ணெய் வளங்களை சுரண்ட அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக பேச்சுக்கள் அடிப்பட்டிருக்கின்றன. ஆனால், அவ்வளவு சீக்கிரம் அப்படியெல்லாம் எடுத்துவிட முடியாது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
வெனிசுலாவில் நிலவும் அரசியல் உறுதித்தன்மை இன்மை, அதன் எண்ணெய் துறையில் வெளிநாட்டு முதலீடுகளைத் தடுக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மதுரோ பிடிபட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் என அதிபர் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

தூக்கி நிறுத்துவரா?
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களில் ஒன்றைக் கொண்டுள்ள வெனிசுலாவின் உற்பத்தி, கடந்த பல பத்தாண்டுகளாக அந்நிய முதலீட்டுக் குறைபாடு காரணமாக பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக, 2000களில் அந்நாடு எண்ணெய் செயல்பாடுகளை நாட்டுடைமையாக்கிய பின்னர், உற்பத்தி குறைந்தது. முடங்கி போய் இருக்கும் உற்பத்தியை, டிரம்ப் தூக்கி நிறுத்துவார் என்று சொல்லப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஜகா வாங்கிய நிறுவனங்கள்
காரணம் பாதுகாப்பு சிக்கல்தான். ஆளை வைத்து மதுரோவை கடத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? வெனிசுலாவில் முதலீடு செய்து கடையை திறந்தால், மக்கள் கற்களை கொண்டு எறியமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஜகா வாங்கி வருகின்றன.
அமெரிக்கா நடவடிக்கையின் சட்டப்பூர்வத்தன்மை குறித்த கேள்விகள் மற்றும் நீண்டகால அரசியல் ஸ்திரமின்மை போன்ற பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் முதலீடுகள் அவ்வளவு சீக்கிரம் வெனிசுலாவுக்கு வராது.
அமெரிக்க நிறுவனங்கள்
அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் வெனிசுலாவுக்குத் திரும்ப வேண்டுமானால், அவர்களுக்கு பணம் கிடைக்கும் என்பதும் குறைந்தபட்ச பாதுகாப்பு உறுதி அளிக்கப்படும் என்பதும் தெளிவாகத் தெரிய வர வேண்டும் என்று CHRIS வெல் கன்சல்டிங் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு இயக்குனர் மார்க் கிறிஸ்டியன் தெரிவித்திருக்கிறார். மேலும், அந்நாட்டின் மீதான தடைகள் நீக்கப்படும் வரை நிறுவனங்கள் திரும்பிச் செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களின் அதிக முதலீட்டை ஈர்க்கும் வகையில் வெனிசுலா தனது சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியதும் அவசியமாகும். வெனிசுலா 1970களில் தனது தொழில்துறையை நாட்டுடைமையாக்கியது. பின்னர், 2000களில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
எண்ணெய் உற்பத்தி
எனவே தற்போது டிரம்ப் ஆதரவுடன் வெனிசுலாவில் புதிய ஆட்சி உருவாக்கப்பட்டு, உள்கட்டமைப்பு சரிசெய்யப்பட்டு முதலீடுகள் சீரமைக்கப்பட்டால் அடுத்த 5-7 ஆண்டுகளில் வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால், இத்தகைய சூழ்நிலை அமைய அனைத்தும் சரியாக நடக்க வேண்டும். அரசியல் மாற்றம் சீர்குலைந்து, அமெரிக்க ஆதிக்கம் இருப்பதாக வெனிசுலா மக்கள் சுதாரித்துக்கொண்டால், பல ஆண்டுகளுக்கு எதிர்ப்பு நீடிக்கும்.
வெனிசுலாவில் செயல்படும் ஆயுதமேந்திய குடிமக்கள் குழுக்கள் மற்றும் கொரில்லா குழுக்கள் அமெரிக்க அரசுக்கு முக்கிய அச்சுறுத்தல் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
லாபம் கிடைக்குமா?
1970களில் வெனிசுலா உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தியில், 7 சதவீதத்திற்கும் மேல் பங்கு அளித்திருந்தது. ஆனால், 2010இல் இதன் உற்பத்தி சரிய தொடங்கியது. கடந்த ஆண்டு, வெறும் 1 சதவீதம் அளவுக்கு மட்டுமே எண்ணெய் உற்பத்தியை செய்தது. இப்போது வெனிசுலாவில் உற்பத்தியாகும் எண்ணெய் பெரும்பாலும் சீனா மற்றும் கியூபாவுக்கு செல்கிறது. இந்த எண்ணெய் ஓட்டத்தை, தன் பக்கம் திருப்பினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று அமெரிக்கா கணக்கு போடுகிறது.
பிரச்சனை என்னவெனில், கடந்த காலங்களில் ஈராக் மற்றும் லிபியா நாடுகளில் அமெரிக்கா ஆட்சி மாற்றங்களை செய்து எண்ணெய் வளத்தை கைப்பற்றியது. ஆனால், அதன் மூலம் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. அதேபோல வெனிசுலாவிலும் லாபம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.












Click it and Unblock the Notifications