களமிறக்கப்பட்ட ராணுவம்! டிரம்பிற்கு சிக்கல் மேல் சிக்கல்! வெடித்த மாபெரும் போராட்டம்! என்ன நடக்கிறது
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக நாடு கடத்துவோருக்கு எதிரான நடவடிக்கைகளை டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். இதற்கிடையே கலிபோர்னியாவில் டிரம்ப் அதிகாரிகளுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அங்கு 2000+ ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்தின் போதே சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை நாடுகடத்துவேன் என்பதை வாக்குறுதியாகவே முன்வைத்திருந்தார். அதுபோலவே அவர் அதிபராகப் பதவியேற்ற உடனேயே நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. முதலில் பலர் ராணுவ விமானங்கள் மூலம் நாடுகடத்தப்பட்டனர்.

அமெரிக்கா
கைகளில் விலங்கிட்டப்படி, ராணுவ விமானத்தில் மிக மோசமாக நாடுகடத்தப்பட்டனர். இப்போது அதுபோல நாடுகடத்தப்படுவது குறைந்துவிட்ட போதிலும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களைப் பிடித்து வெளியே சொந்த நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்காக டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் தொடர்ச்சியாக ரெய்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
டிரம்பிற்கு எதிராக வெடித்த போராட்டம்
அப்படி தான் டிரம்ப் அதிகாரிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். ஒரே நாளில் சுமார் 44 பேர் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டனர். இதுபோல ஒரே நாளில் பலர் கைது செய்யப்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து அங்கு மிகப் பெரிய போராட்டம் நடந்தது. அமைதியின்மையும் ஏற்பட்டது. மிகப் பெரிய போராட்டம் திடீரென வெடித்த நிலையில், அதில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் கார் டயர்களை வெட்டியதாகவும் பெடரல் அதிகாரிகள் புகாரளித்துள்ளனர்.
களமிறக்கப்பட்ட ராணுவம்
இந்த போராட்டத்தால் பதட்டங்கள் அதிகரித்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் அங்குப் பாதுகாப்பிற்காக 2,000 தேசியப் பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்பியுள்ளது. அதேநேரம் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசோம் கண்டித்துள்ளார். கலிபோர்னியா கவர்னராக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கேவின் நியூசோம் இருக்கிறார். டிரம்ப் நிர்வாகம் வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சாடியுள்ளார்.

அதிபர் டிரம்ப்
இதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், "கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசோம், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் ஆகியோரால் அவர்களின் வேலையைச் செய்ய முடியவில்லை. இதனால் பெடலர் அரசு தலையிட்டு கலவரங்கள் தீர்க்கும்" எனப் பதிவிட்டுள்ளார். கலிபோர்னியாவில் பெடரல் அதிகாரிகளின் நடவடிக்கையை நியாயப்படுத்தி அவர் பதிவிட்டிருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் 2வது நாளாக மோதல் இன்றும் தொடர்ந்தது. கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும், கலைந்து போகாத போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். டிரம்ப் மற்றும் பெடரல் நிர்வாகத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
அமெரிக்காவின் சிக்கல்
சட்டவிரோத குடியேறிகளால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை டிரம்ப் திரும்பத் திரும்ப முன்வைக்கிறார். ஆனால், உண்மையில் கட்டிட வேலை, ஹோட்டல் வேலை என மிகவும் அடிப்படை வேலைகளில் மட்டுமே இதுபோல சட்டவிரோத குடியேறிகள் ஈடுபடுகிறார்கள். இதனால் பொருளாதாரத்திற்குப் பெரிய பாதிப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால், டிரம்ப் அதை வைத்தே தொடர்ச்சியாக அரசியல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications