"அப்படியே பூமியை போல.." தொலை தூரத்தில் சுற்றி கொண்டிருக்கும் புதிய கிரகங்கள்! ஆய்வாளர்கள் செம ஹேப்பி
பூமியை போலவே இருக்கும் இரண்டு கிரகங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வாஷிங்டன்: இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போலவே வேறு எந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக் கூடிய சூழல் உள்ளது என்பதைக் கண்டறிய உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பூமியைப் போலவே இருக்கும் இரண்டு கிரகங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது ஒட்டுமொத்த இந்த பேரண்டத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றனரா என்பதே ஆய்வாளர்களுக்கு எப்போதும் இருக்கும் கேள்வி. இதன் காரணமாகவே வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல உலகின் மற்ற கிரகங்களுக்கும் சிக்னலை அனுப்பும் முயற்சியிலும் மனிதர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பிரபஞ்சத்தில் ஏதாவது ஒரு கிரகத்தில் இருக்கும் உயிரினங்களைக் கண்டுபிடிப்பதே ஆய்வாளர்களின் நோக்கமாக உள்ளது.

ஆய்வு
இப்போது நாம் பல அதிநவீன கருவிகளைக் கண்டுபிடித்து வருகிறோம். இதன் மூலம் முன்பை காட்டிலும் நம்மால் சூரியக் குடும்பத்திற்கு வெளியே இருக்கும் பல கிரகங்கள் குறித்தும் ஈஸியாக ஆய்வுகளைச் செய்ய முடிகிறது. தொலைதூர கிரகங்கள் குறித்தும் அங்கிருக்கும் சூழல் குறித்தும் ஆய்வு செய்ய முடிகிறது. இதனிடையே ஆய்வாளர்கள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் பூமியைப் போலவே பெரியதாகவும் வாழக்கூடியதாகவும் இருக்கும் இரண்டு கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு கிரகங்கள்
இந்த இரண்டு கிரகங்களையும் GJ 1002 b மற்றும் c என்று ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். இந்த இரு கிரகங்களும் அதன் நட்சத்திரத்திலிருந்து சரியான தூரத்தில் உள்ளன. இது சரியான வளிமண்டலத்தைக் கொண்டிருப்பதால், கிரகத்தின் மேற்பரப்பில் இதன் மூலம் நீர் உருவாகும் வாய்ப்பு அதிகம். சூரியனில் இருந்து பூமி உள்ளதைப் போலவே இந்த கிரகத்திற்கும் அதன் நட்சத்திரத்திற்கும் இடையே தொலைவு உள்ளதே இப்போது ஆய்வாளர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

எப்படி இருக்கிறது
இந்த இரு கிரகங்களில் பூமியை விடச் சற்றே அதிகமான எடை கொண்டதாக பிளானட் பி உள்ளது. பிளானட் c பூமியை விட மூன்றில் ஒரு பங்கு பெரியது. இது அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வர 20 நாட்கள் வரை ஆகிறது. ஜிஜே 1002 என அழைக்கப்படும் அந்த நட்சத்திரம் (சூரியனைப் போன்றது) ஆக்ரோஷமான காலகட்டத்தைக் கடந்து இப்போது அமைதியாக இருப்பது போலத் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆரம்பக் காலத்தில் எந்தவொரு நட்சத்திரமும் ஆக்ரோஷமாகவும் அதிக வெடிப்புகள் நிறைந்ததாகவும் இருக்கும்... ஆனால் காலப்போக்கில் அவை அமைதியானதாக மாறிவிடும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

நட்சத்திரம்
இந்த இரு கிரகங்களும் சுற்றி வரும் நட்சத்திரம் அமைதியாக இருப்பதால் அங்கு புதிய கிரகங்கள் உருவாகும் வாய்ப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரேடியல் வேக அளவீடுகளைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் இந்த இரண்டு புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகங்கள் குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளைத் தொடங்கும் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முதல் முறை இல்லை
அதேநேரம் இதுபோன்ற உயிரினங்கள் இருக்கக் கூடிய கிரகத்தைக் கண்டுபிடிப்பது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல கிரகங்கள் இதுபோல கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் பூமியை விட 1.5 மடங்குக்கும் குறைவானதாக அல்லது ஐந்து மடங்கு வரை பெரியவையாக உள்ளன. இருப்பினும், இந்த அனைத்து கிரகங்களிலும் மனிதர்களால் வாழ முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால் எந்தவொரு கிரகத்திலும் உயிரினங்கள் தோன்ற வளிமண்டலம் முக்கியமாகும். அவை இந்த கிரகங்களில் இருக்கிறதா என்பதை ஆய்வாளர்களால் தற்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை


Click it and Unblock the Notifications
