கொரோனா வைரஸ் போல மங்கி பாக்ஸ் காற்றின் மூலம் பரவுமா? நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்வி! பதில் என்ன
வாஷிங்டன்: இப்போது மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை குறித்த தகவல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளுக்கும் இந்த மங்கி பாக்ஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது கொரோனா வைரஸ் அல்லது சாதாரண காய்ச்சலைப் போல காற்றின் மூலம் பரவும் ஆபத்து இருக்கிறதா என்பதற்கு வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கொரோனா நம்மை எந்தளவுக்குப் படுத்தி எடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது கொரோனாவை போலவே மங்கி பாக்ஸ் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.

இது கிளேட் 1 வகை மங்கி பாக்ஸ் காரணமாக ஏற்படுகிறது. இப்போது காங்கோ குடியரசில் பதிவாகும் பாதிப்புகளில் 70% கேஸ்கள் இந்த கிளேட் 1 வகையால் பரவுகிறது. அதேபோல இறப்புகளில் 88% இந்த வகையால் தான் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே இப்போது பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
மங்கி பாக்ஸ்: மங்கி பாக்ஸ் என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய நோயாகும். இது வழக்கமாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் வெப்பமண்டல மழைக் காடுகளில் ஏற்படும். அரிதாகவே மற்ற பகுதிகளுக்குப் பரவும். இப்போது ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்டோருக்கு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 524 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உலக சுகாதார அமைப்பும் இதைச் சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.
மங்கி பாக்ஸ் ஏற்படும் போது காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் தோலில் புண் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. ஏற்கனவே இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு இருப்போருடன் நெருங்கிப் பழகினால் அல்லது நேரடியாகத் தொடர்பு கொண்டால் இந்த மங்கி பாக்ஸ் ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
எச்சரிக்கை: நோயாளியுடன் நேருக்கு நேர் அமர்ந்து நீண்ட நேரம் பேசுவதால் வைரஸ் பரவும் ஆபத்து அதிகரிப்பதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல மூச்சு விடும் போது வெளிப்படும் சுவாச நீர்த்துளிகள் மூலம் இது பரவும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது. இருப்பினும், நெருங்கிய தொடர்பு மற்றும் பாலியல் தொடர்பு ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, சுவாச நீர்த்துளிகள் மூலம் பரவுவது குறைவு தான்.
காற்றில் பரவுமா: சரி விஷயத்திற்கு வருவோம். இந்த மங்கி பாக்ஸ் கொரோனா போல நீண்ட தூரத்திற்குக் காற்றில் பரவுமா.. 2023இல் தி லான்செட் மைக்ரோப் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் முறையான காற்றோட்டம் இல்லாத அறைகளில் மங்கி பாக்ஸ் காற்றின் மூலம் பரவும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நீண்ட நேரம் நோயாளியுடன் இதுபோல இருந்தால் மட்டுமே மங்கி பாக்ஸ் பரவுமாம்.
மங்கி பாக்ஸ் வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா போலக் காற்றில் நீண்ட தூரத்திற்கும் பரவாது. விரைவாகவும் பரவாது. அதாவது நோயாளியுடன் உட்கார்ந்து பேசும் போது சில நொடிகள் என்றாலே கொரோனா பரவும். ஆனால், மங்கி பாக்ஸ் இதுபோல பரவாது. மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டவருடன் நீண்ட நேரம் தொடர்பில் இருப்பது, நோயாளியுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற காரணங்களால் மட்டுமே மங்கி பாக்ஸ் பரவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சிகிச்சை முறை இருக்கா: தற்போது இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பிற்கு நிலையான சிகிச்சை முறை இல்லை. அதேநேரம் Bavarian Nordic நிறுவனத்தின் MVA-BN தடுப்பூசியை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா நாடுகள் அங்கீகரித்துள்ளது. இதுதான் இப்போது முக்கியமான வேக்சினாக இருக்கிறது. இது தவிர சீரம் நிறுவனமும் தடுப்பூசியை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications