புயலை கிளப்பும் ஏஐ கருவிகள்.. பல லட்சம் வேலையிழப்பு? ஓபன்னாக பேசிய சுந்தர் பிச்சை! என்ன சொன்னார்
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி இப்போது வேற லெவலில் இருக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலையிழப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் ஒரு தரப்பிற்கு இருக்கிறது. இதனிடையே கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்
கடந்த சில காலமாகவே ஏஐ கருவியின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துவிட்டது. குறிப்பாக சாட் ஜிபிடி டெக் துறையில் அடுத்து மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே எங்குப் பார்த்தாலும் இந்த சாட் ஜிபிடி குறித்தே பேச்சாக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் சாட் ஜிபிடியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏஐ என்ற நிறுவனம் தான் இந்த சாட் ஜிபிடியை உருவாக்கியுள்ளது.

ஏஐ கருவிகள்: நாம் இதுவரை கண்டதில் மிகவும் வலிமையான ஒரு கருவியாக இந்த சாட் ஜிபிடி இருக்கிறது. எந்தவொரு கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும், கவிதை கேட்டால் கவிதை சொல்லும்.. காமெடி கேட்டால் காமெடி சொல்லும்.. அவ்வளவு ஏன் லவ் லெட்டர் கூட எழுதித் தரும். அந்தளவுக்கு வலிமையான கருவியாக இருக்கும் இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேநேரம் ஏஐ எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு காரணமாக மனிதர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. ரோபோக்கள் காரணமாக நமக்கு வேலை இழக்கும் ஆபத்து இருக்கிறதா என்பதே இப்போது பலருக்கும் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக சாப்ட்வேர் தொழிலில் உள்ளவர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாகவே பலரும் கூறி வருகின்றனர்.
வேலையிழப்பு: பொதுவாக ஒரு குறிப்பிட்ட வேலையைத் திரும்பச் திரும்பச் செய்து கொண்டிருந்தால் மனிதர்கள் மூளை டயர்ட் ஆகிவிடும். இதுபோல வேலைகளில் ஏஐ நிச்சயம் பெரியளவில் உதவும். ஒரே போல வேலையை எத்தனை தடவை செய்தாலும் அது டயர்ட் ஆகாது. இந்த துறைகளில் அது பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவே வேலையிழப்பிற்கும் காரணமாக இருக்குமோ என்றும் பலரும் அஞ்சுகின்றனர்.

இதனிடையே இது தொடர்பாக உலகின் டாப் டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு, சாட் ஜிபிடி ஆகியவை குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார்.
என்ன சொன்னார்: கூகுள் நிறுவனத்திலேயே பல ஆயிரம் சாப்ட்வேர் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இப்போது வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து கூகுள் ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த சுந்தர் பிச்சை, "எந்தவொரு புது தொழில்நுட்பத்திற்கும் நாம் அடாப்ட் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றபடியும் நாம் மாறிக் கொள்ள வேண்டும். சில துறைகளில் நாம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கும்.
நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் ஒன்று தான்.. இதில் இரண்டு விஷயங்கள் உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரோகிராம் துறையில் குறிப்பிட்ட பகுதிகள் மேலும், சிறப்பானதாக மாறும். செயற்கை நுண்ணறிவு கோடிங்கை கூகுள் டாக்குமென்டில் ஒன்றை எழுதுவது போல மாற்றிவிடும். நீங்கள் ஒரு புரோகிராமராக இருந்தால், இதற்கு ஏற்ப நீங்கள் மாற வேண்டும். உங்கள் கோடிங் திறமையை இது எளிதாக்கும் என்று நான் நினைக்கிறேன்
புரோகிராமிங்: ஆனால் இது மோசமான செய்தியோ அல்லது இதற்காக நாம் கவலை கொள்ளவோ தேவையில்லை. என்னை உற்சாகப்படுத்தும் மற்றொரு விஷயம் என்னவென்றால் வரும் காலத்தில் புரோகிராமிங் என்பது அனைவரும் செய்யக் கூடிய ஒன்றாக மாறும். அது உலகம் அடுத்தகட்டத்திற்குச் செல்ல முக்கிய காரணமாக இருக்கும். இதன் மூலம் நாம் புதுப்புது விஷயங்களை உருவாக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் ஏஐ காரணமாக என்ன மாதிரியான ஆபத்துகள் ஏற்படும் என்பதை முன்னதாக சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத் தலைவர் சாம் ஆல்ட்மேன் பேசியிருந்தார். நாம் இதைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் மோசமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சாடியிருந்தார்.

ஆபத்து இருக்கிறதா: இருப்பினும், சுந்தர் பிச்சை அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பெரிதாகப் பேசவில்லை. அவர் கூறுகையில், "இந்த புது செட்அப்கள் மிகவும் திறமையானதாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பொதுவாகவே இதுவரை கண்டிராத அளவில் நன்மைகளை வழங்கும் தொழில்நுட்ப அமைப்புகளை நாம் பெற போகிறோம்.
அப்படியானால், பொய்யான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பும் ஏஐ கருவிகளையும் உருவாக்க முடியுமா.. ஆமாம்.. ஆனால், ஏஐ மட்டுமே போலி செய்திகளைப் பரப்பும் என்பதில் உண்மை இல்லை.. ஏஐ குறித்த அச்சம் நமக்கு இருப்பதாலேயே அதனால் ஏற்படும் மோசமான பாதிப்புகள் குறித்து மட்டும் நாம் யோசிக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications