"நோ ஆப்ஷன்.." ட்விட்டரில் ஒரே மெயிலில் பலர் பணி நீக்கம்! இதுதான் ரியல் காரணம்.. உண்மையை உடைத்த மஸ்க்
வாஷிங்டன்: ட்விட்டரில் மிகப் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்துள்ள நிலையில், எலான் மஸ்க் முதல்முறையாக அதற்கான காரணத்தை விளக்கிப் பேசியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மற்ற சமூக வலைத்தளங்களைப் போல ட்விட்டர் நிறுவனத்தால் பெரிய அளவில் வளர முடியவில்லை. இதனால் ட்விட்டர் முதலீட்டாளர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இந்தச் சூழலில் தான் ட்விட்டர் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். சில மாதங்களுக்கு முன்பே அவர் அறிவித்தாலும் கூட சமீபத்தில் தான் இந்த டீல் நிறைவடைந்தது.

எலான் மஸ்க்
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளுக்குச் சென்றதில் இருந்தே அதில் பல அதிரடி மாற்றங்கள் வரும் என்றே பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முதலில் ப்ளூ டிக் வசதிக்கு மாதம் 8 டாலர் தர வேண்டும் என அதிர்ச்சி அளித்தார் மஸ்க். அத்துடன் நில்லாமல் ஆட்குறைப்பிலும் அவர் உடனடியாக இறங்கினார். டாப் அதிகாரிகளை முதல் நாளே வேலையை விட்டு நீக்கிய மஸ்க், அடுத்த கட்ட ஆட்குறைப்பை நேற்று தொடங்கினார்.

50% பணி நீக்கம்
ட்விட்டரில் இப்போது 7500 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அதில் 50% பேரைப் பணி நீக்கம் செய்ய மஸ்க் திட்டமிட்டுள்ளார். ஊழியர்களில் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், சிலர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை இது தொடர்பாக ஊழியர்களுக்கு மெயில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் ட்விட்டர் ஆபீசுக்கு வர வேண்டாம் என்றும் ஏற்கனவே கிளம்பி இருந்தால் அப்படியே திரும்பச் சென்றுவிடும்படி கூறப்பட்டு இருந்தது.

வழக்கு
குறிப்பாக இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் மார்க்கெட் பிரிவு முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ஆட்குறைப்பு என்பது எதிர்பார்த்த ஒன்று தான். எனவே, பெரியளவில் இதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை. அதேநேரம் சிலர் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர். இருந்த போதிலும், எலான் மஸ்க் தனது முடிவைத் திரும்பப் பெற எல்லாம் வாய்ப்பே இல்லை.

தினசரி 4 மில்லயன் நஷ்டம்
இதனிடையே இந்த ஆட்குறைப்பு குறித்து எலான் மஸ்க் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "ட்விட்டரில் ஆட்குறைப்பு செய்துள்ளோம். நிறுவனம் தினசரி 4 மில்லியன் டாலரை இழந்து வரும் சூழலில் துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு வேறு வழியில்லை" என்று அவர் பதிவிட்டு உள்ளார். நேற்று ஒரு பக்கம் ட்விட்டரில் ஆட்குறைப்பு நடந்த நிலையில், மறுபுறம் இந்தியாவில் பலருக்கு ட்விட்டர் தளம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கவே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் விளம்பரங்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பெரியளவில் குறைந்துள்ளது. போலி செய்திகளை ஊக்குவிக்கும் ட்விட்டருக்கு பெரு நிறுவனங்கள் விளம்பரங்களைத் தரக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் பெரும் நிறுவனங்கள் ட்விட்டரில் விளம்பரம் செய்யத் தயங்குகிறது.

போராட்டம்
இதன் காரணமாகவே ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளது. அதேநேரம் எலான் மஸ்க் பேச்சு உரிமைக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்து வருகிறார். அதாவது ஒருவரின் தனிப்பட்ட கருத்தைக் கூற அவருக்கு உரிமை உள்ளது என்பதை நம்புகிறார். இதன் காரணமாகவே ட்விட்டர் தளத்தில் எந்தவொரு நபருக்கும் நிரந்தர தடை விதிக்கக் கூடாது என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

சமூக ஆர்வலர்களே காரணம்
இதனிடையே நேற்று வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய எலான் மஸ்க், "உள்ளடக்க மதிப்பீட்டில் (content moderation) நாங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை.. இப்படி எங்களுக்கு விளம்பரம் தரக் கூடாது என அழுத்தம் தருவோரை சமாளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.. ஆனாலும், சமூக ஆர்வலர்கள் கொடுத்த அழுத்தமே விளம்பரங்கள் குறையக் காரணமாக இருந்தது. இதுவே வருவாயைக் குறைத்து ஆட்குறைப்புக்குக் காரணம்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications