இட ஒதுக்கீட்டை நீக்கும் காங்கிரஸ்? அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சால்.. வெடித்த புதிய சர்ச்சை
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருத்து கூறியதாக இணையத்தில் நேற்று தகவல் பரவியது. இது தொடர்பாக பாஜகவும் ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கிடையே தனது கருத்து குறித்து ராகுல் காந்தி தெளிவுபடுத்தியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் ராகுல் காந்தி: அதன்படி அமெரிக்காவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியா அனைவருக்கும் நியாயமான இடமாக மாறும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் என்றார். அதேநேரம் தற்போதைய சூழலில் இந்தியாவில் அந்த சூழல் இல்லை எனக் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளதாக பாஜகவைச் சேர்ந்த பலரும் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இதற்குப் பதிலடி கொடுத்திருந்தார். ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று தேச விரோத கருத்துகளைப் பேசி வருவதாகச் சாடியிருந்தார். இதற்கிடையே தனது பேச்சுக்கு ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார். தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறிய ராகுல் காந்தி, காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் எடுத்துச் செல்லும் என்றார்.
ராகுல் காந்தி விளக்கம்: இது தொடர்பாக அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி, "நேற்று நான் சொன்ன கருத்துகளை வைத்து நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்று திட்டமிட்டு சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள். ஆனால் நான் தெளிவாகச் சொல்கிறேன்.. நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவன் அல்ல. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் போது இட ஒதுக்கீட்டை நாங்கள் 50 சதவீத வரம்பிற்கு மேல் எடுத்துச் செல்வோம்.
நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியா அனைவருக்கும் சமமான வாய்ப்பை தரும் ஒரு நியாயமான இடமாக மாறும் போது மட்டுமே காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து யோசிக்கும். இந்த நேரத்தில் இந்தியா என்பது அனைவருக்குமான இடமாக இல்லை. இந்தியாவில் 90 சதவீதம் இருக்கும் ஓபிசிக்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை" என்றார்.
சாதி வாரியான கணக்கெடுப்பு: தொடர்ந்து சாதிவாரியான கணக்கெடுப்பு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தலித்துகள் நமது சமூகத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவே சாதி ரீதியான கணக்கெடுப்பு உதவும். நாட்டின் 90% மக்கள் தொகையாக இருந்தாலும் நாட்டின் டாப் 200 நிறுவனங்களில் அவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்களிலும் இதுவே நிலை.
ஒவ்வொரு சமூகத்தினரும் பொருளாதார ரீதியில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறோம். அவர்கள் இந்தியாவுக்கு எப்படிப் பங்களிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி இட ஒதுக்கீடு விவகாரத்தில் என்ன தான் இப்படியொரு விளக்கத்தை அளித்தாலும் அதை பாஜக ஏற்பதாக இல்லை. காங்கிரஸ் கட்சி இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி என்பதையே ராகுல் காந்தியின் கருத்து காட்டுவதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications