கடைசி நேரத்தில் அதிபர் ரேஸில் இருந்து விலகும் பைடன்? அடுத்து என்ன நடக்கும்.. புதிய வேட்பாளர் யார்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து பைடன் விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அவர் இது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேலை பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகினால் அது ஒரு சிக்கலான செயல்முறைக்கு வழிவகுக்கும். பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகினால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்க்கலாம்.
டிரம்ப் உடனான விவாதத்திற்குப் பிறகு பைடன் உடல்நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இருப்பினும், 81 வயதான பைடன் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

இருப்பினும், சமீப நாட்களில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தே வருகிறது. அழுத்தம் அதிகரித்ததால் வேறு வழியின்றி பைடன் அதிபர் தேர்தலிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பைடன்: ஒரு வேளை அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகினால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பலருக்கும் கேள்வி இருக்கும். பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகுவது ஒரு சிக்கலான செயல்முறையைத் தூண்டிவிடும்.. ஜனநாயக கட்சி வேட்பாளரை நியமிக்கும் முறையைக் கூட மாற்ற வேண்டி இருக்கும். ஒரு வேலை பைடன் விலகினால் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்.
பைடன் முதலில் ஜனநாயக கட்சியின் தேசியக் குழுவுக்குத் தனது முடிவைத் தெரியப்படுத்த வேண்டும். பைடன் முடிவை ஏற்கும் தேசிய குழு, புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையைத் தொடங்கும். பொதுவாக அங்கே அதிபர் வேட்பாளராக இருப்பவர் தான் கட்சி செயல்முறையைக் கவனிப்பார் பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகினால், கட்சியைத் தற்காலிகமாக நிர்வகிக்க இடைக்கால தலைவர் நியமிக்கப்படுவார்.
அடுத்து என்ன: ஜனநாயக கட்சியில் உள்ள பிளாக் குழு, ஹிஸ்பானிக் குழு மற்றும் முற்போக்கு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் புதிய வேட்பாளரைத் தேர்வு செய்ய அடுத்தடுத்து கூட்டப்படும். இவர்கள் அதிபர் ரேஸில் போட்டியிட விருப்பம் தெரிவிப்போரிடம் ஆலோசனைகளையும் நடத்துவார்கள். யார் சிறந்த வேட்பாளராக இருப்பார் என்பதை இறுதி செய்து, அதன் பிறகு டேட்டா பகுபாய்பு, சர்வே ஆகியவை நடத்தப்படும். பொதுவாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்யும் செயல்முறை பல மாதங்கள் நடக்கும். அதை விரைவுபடுத்தும் வகையில் ஷெட்யூல் போடுவார்கள்.
ஒருவர் வேட்பாளராகத் தேர்வான பிறகு அவர் விலகினால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அக்கட்சியின் விதிகளில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எனவே, அதன்படி அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். நேரடியாக வாக்கெடுப்பு மூலம் மாற்று வேட்பாளரைத் தேர்வு செய்ய ஏதுவாக விதிகள் மாற்றி அமைக்கப்படும்.
மொத்தமாக மாறும்: இப்போது குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் தான் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல அடுத்த மாத தொடக்கத்தில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடக்கிறது. அதில் தான் பைடன் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தார். ஒரு வேளை பைடன் விலகினால்.. தேசிய மாநாட்டிற்கு முன்பாக அவர்கள் மாற்று வேட்பாளரைத் தேர்வு செய்தாக வேண்டும்.
மாற்று வேட்பாளர்கள் யார்: பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகினால் அவருக்குப் பதிலாகக் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், மிச்சிகன் கவர்னர் கிரெட்சன் விட்மர், இல்லினாய்ஸ் கவர்னர் ஜே.பி. பிரிட்ஸ்கர் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.












Click it and Unblock the Notifications