"ஏரியா 51!" ஏலியன்கள் ஆய்வு.. கூகுள் மேப்பிலும் தெரியாதாம்! கிட்ட போனாலே மளமளவென வந்து.. பகீர் தான்
அமெரிக்காவின் மர்ம பிரதேசமாக அறியப்படும் ஏரியா 51 குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: உலகிலேயே மிகவும் மர்மமான பகுதியாகக் கருதப்படும் ஏரியா 51இல் நுழைய முயன்ற போது என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அமெரிக்காவில் இருக்கும் ஏரியா 51 ரொம்பவே பிரபலம்.. பல ஹாலிவுட் திரைப்படங்கள் தொடங்கி, புத்தகம், டிவி சீரியஸ் என்று அனைத்திலும் இந்த ஏரியா 51 மர்மம் குறித்துப் பேசும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
மர்ம பிரதேசமாக இருக்கும் இந்த ஏரியா 51 உள்ளே என்ன நடக்கிறது என்பது குறித்து பலரும் பல விதமாகக் கூறி வருகின்றனர். இதற்கிடையே ஏரியா 51 குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏரியா 51
ஏரியா 51 எப்போதும் உலகின் மர்மமான மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக இருந்துள்ளது. சாதாரண மனிதர்களால் இந்த ஏரியா 51இல் என்ன இருக்கும் என்பது குறித்து யூகிக்கவே முடியும். உள்ளே என்ன இருக்கும் என்பது குறித்து யாருக்கும் எதுவுமே தெரியாது. பல ஆண்டுகளாகவே பறக்கும் தட்டுகள், வேற்று கிரக வாசிகளை தொடர்புப்படுத்தியே இந்த ஏரியா 51 குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இயல்பாகவே மக்களுக்கு இந்த ஏரியா 51 மீது ஆர்வம் அதிகரிக்கிறது.

ரகசிய இடம்
இந்த ஏரியா 51 அமெரிக்காவின் நெவாடாவின் நடுவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இந்த பகுதியைக் கூகுள் மேப்பிலும் பார்க்க முடியாது. ஜூம் செய்து பார்த்தாலும் எதுவும் தெரியாது. அந்தளவுக்கு ரகசியமான ஒரு பகுதியாகவே இது இருந்துள்ளது. இந்த ஏரியா 51 குறித்துப் பல ஆண்டுகளாகத் தகவல்கள் உலா வந்து கொண்டிருந்தாலும் கூட, 2013இல் ஒபாமா அதிபராக இருந்த போது தான் இப்படி ஒரு இடம் இருப்பதை சிஐஏ அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

யாராலும் நுழைய முடியாது
யுஎப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் மற்றும் ஏலியன்கள் குறித்த ஆய்வுகளே ஏரியா 51இல் நடந்து வந்துள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுநாள் வரை இதை ஒரு ரகசிய தளமாக அமெரிக்கா அறிவிக்கவில்லை. அமெரிக்கா இப்படி மவுனமாக இருப்பதால்.. பலரும் பலவிதமான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இருப்பினும், உலகில் வெகு சிலருக்கு மட்டுமே இந்த ஏரியா 51 குறித்தும் அங்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது குறித்தும் தெரியும். அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட இந்த பகுதியில் யாராலும் நுழையவே முடியாது.

2019இல் நடந்த சம்பவம்
பலத்த பாதுகாப்பு இருக்கும் போதிலும், கடந்த காலங்களில் இங்கே அத்துமீறி நுழைய முயற்சிகள் நடந்துள்ளன. இங்கே அத்துமீறி நுழைந்தால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கடந்த 2019இல் எங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பேஸ்புக் பக்கத்தைச் சிலர் ஆரம்பித்தனர். அவர்கள் ஏரியா 51 சுற்றி, இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளே ஏரியா 51 உள்ளே நுழையவும் முடிவு செய்தனர். இணையத்தில் சுமார் 20 லட்சம் பேர் இந்த இடத்திற்கு வர ஆர்வம் காட்டினர். இருப்பினும், அவர்கள் திட்டமிட்டது போல எதுவும் நடக்கவில்லை.

நடந்தது என்ன
20 லட்சம் பேர் ஆர்வம் காட்டினாலும், நிகழ்ச்சிக்கு வந்தது வெறும் 150 பேர் தான். அவர்களுக்கும் ஏரியா 51 இருக்கும் இடத்திற்குச் செல்ல துணிச்சல் இல்லை. கடைசியாக 60 வயதான ஒரே ஒரு பெண் தான் ஏரியா 51 கதவின் அருகே சென்றார். அவருக்கும் $1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே அப்போது என்ன நடந்தது அங்கு உள்ளே நுழைய முயன்றால் என்ன நடக்கும் என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையா எனத் தெரியவில்லை என்ற போதிலும் இணையத்தில் பலரும் இந்த வீடியோவை வேகமாகப் பரப்பி வருகின்றனர்.

பகீர் வீடியோ
அதில் தந்தையும் மகனும் சேர்ந்து ஏரியா 51க்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது.. அவர்கள் ஏரியா 51க்கு அருகில் வந்தபோது திடீரென இரு காவலர்கள் வருகிறார்கள். வீடியோவில் அந்த காவலர்கள், பைக்கில் ஆயுதங்களுடன் வந்து இவர்களைக் கீழே படுக்கச் சொல்கிறார்கள். மேலும் யார் என்று அதிகாரிகள் அதட்டவே, சும்மா பைக்கில் பயணித்து வந்ததாக இருவரும் கூறிய பின்னரே, காவலர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகிறார்கள். உடனடியாக இந்த ஏரியாவை விட்டுச் செல்லும்படி எச்சரிக்கும் அவர்கள், இல்லையென்றால் 750 டாலர் (ரூ. 62 ஆயிரம்) பைன் போட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications