அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமெரிக்க கிரீன் கார்டு லாட்டரிக்கு இந்தியர்கள் தகுதி இல்லை! வந்த ஷாக் உத்தரவு
வாஷிங்டன்: இந்தியாவுக்குப் பேரதிர்ச்சி கொடுக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது Diversity Visa - DV எனப்படும் பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கு இந்தியர்கள் தகுதி பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் இதில் தகுதி பெற மாட்டார்களாம். இது குறத்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவில் பல்வேறு வகையான குடியேற்றத் திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று முக்கியமானது Diversity Visa - DV... அமெரிக்காவில் குறிப்பிட்ட சில நாட்டினரே அதிகம் குடியேறக்கூடாது.. அனைத்து தரப்பு மக்களும் அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் எல்லா நாட்டு மக்களும் அமெரிக்காவுக்குக் குடியேற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

விசா
கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு எந்த நாடுகளில் இருந்து குறைந்த அளவில் மக்கள் வந்துள்ளனரோ, அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தகுதி பெறுவார்கள். இது லாட்டரி சிஸ்டம் போலச் செயல்படும். இதில் தகுதியான நாடுகளில் இருந்து வந்த விண்ணப்பங்களுக்குக் குலுக்கல் முறையில் விசா வழங்கப்படும். எந்த நாடுகளில் இருந்து குறைந்த அளவு மக்கள் வந்துள்ளனரோ.. அவர்கள் மட்டுமே லாட்டரியில் பங்கேற்க அனுமதி உண்டு.
அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 50,000க்கும் குறைவான மக்கள் எந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளனரோ.. அந்த நாடுகளின் மக்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். பல ஆண்டுகளாகவே இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள் அமெரிக்காவுக்குச் செல்வதால் இந்த சிஸ்டத்திற்கு அவர்கள் தகுதி பெற மாட்டார்கள்.
இந்தியர்கள்
கடந்த 2021ம் ஆண்டு 93,450 இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். கடந்த 2022-ல் 1,27,010 இந்தியர்களும், 2023-ல் 78,070 இந்தியர்களும் அமெரிக்காவிற்குக் குடியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தென் அமெரிக்கா (99,030), ஆப்பிரிக்கா (89,570), அல்லது ஐரோப்பா (75,610) கண்டங்களில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்றவர்களைக் காட்டிலும் இந்தியாவில் இருந்து சென்றோரின் எண்ணிக்கை அதிகமாகும்.
இதன் காரணமாக, இந்தியர்கள் 2028 வரை இந்த DV லாட்டரிகளுக்கு தகுதி பெற மாட்டார்கள்.. இந்தியாவைப் போலவே சீனா, தென் கொரியா, கனடா, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் DV லாட்டரிக்கு தகுதி பெறாது. தகுதி பெற்ற நாடுகளுக்கான விசா ஒதுக்கீடுகள் கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..
இந்தியர்களுக்குச் சிக்கல்
இந்தியர்கள் அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்தே வருகிறது. ஹெச்-1பி விசாவை குடியுரிமையாக மாற்றுவது, முதலீட்டின் அடிப்படையிலான குடியேற்றம், குடும்ப ஆதரவின் மூலம் விண்ணப்பித்தல் என இந்தியர்களுக்கு இப்போது சில வழிகள் மட்டுமே உள்ளன. இதனால் அமெரிக்கா செல்லும் கனவில் இருக்கும் இந்தியர்கள் கவலையடைந்துள்ளனர்.
டிரம்ப்
டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, அவரது நிர்வாகம் மாணவர் விசாக்களின் மீதான குடியேற்றக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் போட்ட போஸ்ட்டை கூட ஆய்வு செய்தே விசா வழங்கும் அளவுக்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராகக் கருத்துச் சொல்வோருக்கு விசா மறுக்கப்படுவது தொடர்ந்து வருவதாகப் புகார்கள் உள்ளன.
அதேபோல் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுபவர்கள், யூத எதிர்ப்பு கொள்கை கொண்டவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆகியோரையும் பரிசோதித்து அவர்களுக்கும் விசா வழங்குவதை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications