ஈரான் போரில் சொதப்பும் டிரம்ப்.. மொத்தமாக கோட்டைவிட்ட அமெரிக்கா.. 7 முக்கிய காரணங்கள்
வாஷிங்டன்: அமெரிக்கா- ஈரான் இணைந்து இஸ்ரேலைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் குழப்பம் அதிகரித்தாலும் கூட மோதல் இப்போது முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இந்த போரில் குழப்பம் தொடர இருக்கும் 7 முக்கியமான காரணங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்கிறது. இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவான ஒரு சிக்னல் இல்லை. இதற்கான காரணங்களை நாம் வரிசையாகப் பார்க்கலாம்.!

டிரம்ப்
1. ஈரான் போரில் வென்றுவிட்டதாக டிரம்ப் சொல்கிறார். ஆனால், இன்னொரு பக்கம் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஈரான் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்துகிறார். ஆனால், முறையான சரணடைதலுக்கு சாத்தியமில்லை. ஆரம்பத்தில் ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு நடக்கும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இப்போது தெளிவற்ற சூழல் நிலவுகிறது.. எனவே, எது இலக்கு எனத் தெரியாமலேயே போர் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
ஹார்முஸ்
2. அடுத்து உலகின் 20% எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. இந்த நீர் வழிப்பாதையை ஈரான் முடக்கியுள்ளது. எந்த கப்பல் வந்தாலும் அடித்து நொறுக்குவோம் என மிரட்டுகிறது. அமெரிக்கக் கடற்படை வலிமையானதாக இருந்தாலும், அங்கிருக்கும் கண்ணி வெடிகள் சரக்கு கப்பல் போக்குவரத்தை நிறுத்துகிறது. இதனால் வாராந்திர கப்பல் போக்குவரத்து 90% சரிந்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய்க்கு $100ஐ தாண்டிவிட்டன. இது போரினால் ஏற்பட்ட 2வது சிக்கலாகும்
3. கடந்த பிப்ரவரி 28ம் தேதி காமேனி படுகொலை செய்யப்பட்டார். அப்போதே ஈரானில் புரட்சி வெடித்து ஆட்சி கவிழ்ப்பு நடக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், கமேனி போனாலும் அவரது தளபதிகள் உடனே கண்ட்ரோலை எடுத்தனர். இதனால் கமேனி மரணம் ஆட்சி கவிழ்ப்புக்கு இட்டுச்செல்லத் தவறிவிட்டது. மேலும், ஈரானின் அடுத்த சுப்ரீம் லீடரும் அறிவிக்கப்பட்டுவிட்டார். இதனால் டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதிலும் தெளிவு இல்லை.
அடித்துவிடும் டிரம்ப்
4. டிரம்ப் வழக்கம் போலத் தனது ஸ்டைலில் அடையவே முடியாத இலக்குகளை வரிசையாக அறிவித்து வருகிறார். நாளுக்கு நாள் அவரது டார்கெட்கள் மாறிக் கொண்டே போகிறது. ஆட்சி மாற்றம், ஈரான் ராணுவம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், ஏவுகணைகளை அழிப்போம், அணு குண்டு உருவாக்காமல் தடுப்போம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்கிறார். இந்த சீரற்ற தகவல்கள் ஒரு தெளிவில்லாத சூழலை உருவாக்குகிறது. மக்களிடையே குழப்பம் அதிகரிக்கிறது.
5. அடுத்துத் தாக்குதலுக்கு ஆகும் செலவும். ஈரான் குறைந்த செலவில் டிரோன் மூலம் தாக்குதல்களை நடத்துகிறது. ஹிஸ்புல்லா உள்ளிட்ட பிராந்திய கூட்டாளிகளும் கை கொடுக்கிறது. ஆனால், ஈரானின் தாக்குதல்களைச் சமாளிக்க அமெரிக்கா மிகப் பெரிய தொகையைச் செலவிட வேண்டி இருக்கிறது. அமெரிக்காவுக்கு இது கெட்ட பெயரையே ஏற்படுத்தித் தருகிறது.
அதிகரிக்கும் எதிர்ப்பு
6. இதனால் உள்நாட்டில் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை மீதான எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாரிஸ்ட் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பின்படி, 55% அமெரிக்கர்கள் ஈரான் எல்லாம் ஒரு அச்சுறுத்தலே இல்லை என்றே கருதுகின்றனர். கடந்த காலங்களில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்கு மக்களிடம் அதிக ஆதரவு கிடைத்திருந்தது. ஆனால், இந்த போருக்குத் தொடக்கம் முதலே அமெரிக்கர்களே எதிராக உள்ளனர். இதனால் எரிபொருள் விலை ஏறுவதும் அமெரிக்கர்களுக்கு அதிருப்தியை அதிகரிக்கிறது.
7. டிரம்ப் அரசுக்கு மிக மிக முக்கியமானது போரை முடிவுக்குக் கொண்டு வரும் வழி என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. எண்ணெய் நெருக்கடி காரணமாக ஈரான் மோதலை நிறுத்த டிரம்ப் ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால், இஸ்ரேல் தாக்குதலைத் தொடர வேண்டும் என்கிறது. மற்றொரு பக்கம் ஈரானும் கூட தங்களுக்கு சில உத்தரவாதங்கள் தேவை எனச் சொல்லி டிமாண்ட் செய்கிறது. இப்படி இடியாப்ப சிக்கலே இருக்கிறது. எனவே, திட்டமிட்டபடி 4 வாரங்களில் போர் முழுமையாக முடியுமா என்பதில் தெளிவில்லாத சூழலே இருக்கிறது.
முடியாது போல
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஈரான் தலைமையை காலி செய்து, அவர்கள் பொருளாதாரத்தை முடக்கும் அளவுக்கு டிரம்ப் நிர்வாகம் அடித்துள்ளது. ஆனால், அது ஈரானை மொத்தமாக வீழ்த்தும் அளவுக்கு இல்லை. இந்த ஒரு குழப்பமான சூழல் காரணமாகவே மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவு இல்லாத சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications