எலான் மஸ்கின் அடாவடி... செம கடுப்பில் நெட்டிசன்கள்.. மனம் விட்டு மன்னிப்பு கேட்ட ட்விட்டர் நிறுவனர்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் எலான் மஸ்க் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்கள் தான் கடந்த சில ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகத்தையும் ஆண்டு வருகிறது. பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் கூட சமூக வலைத்தளங்கள் மூலமே வருகிறது.
இருப்பினும், அனைத்து சமூக வலைத்தளங்களாலும் பெரியளவில் வளர முடிந்ததாகச் சொல்ல முடியாது. குறிப்பாக ட்விட்டர் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே பெரியளவில் வளரவில்லை.

ட்விட்டர்
யூசர்கள் அதிகமாக இருந்தாலும் கூட ட்விட்டர் நிறுவனத்தின் வருமானம் பெரியளவில் அதிகரிக்காமலேயே இருந்தது. இதனால் ட்விட்டர் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்தச் சூழலில் தான் ட்விட்டரை ஒட்டுமொத்தமாக வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இடையில் பின்வாங்கினாலும் வழக்கு தொடர்வோம் என முதலீட்டாளர்கள் மிரட்டியதால் சமீபத்தில் தான் இந்த டீல் நிறைவடைந்தது.

மாற்றங்கள்
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கி உடனேயே அங்குப் பல அதிரடி மாற்றங்கள் வரும் என்பதைப் பலரும் எதிர்பார்த்தே இருந்தனர். ட்விட்டரை வாங்கிய முதல் நாளே சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட டாப் அதிகாரிகளை வேலையைவிட்டுத் தூக்கினார் எலான் மஸ்க். மேலும், ப்ளூ டிக் வைத்திருக்கப் பயனாளர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அடுத்த குண்டை போட்டார் மஸ்க்.

ஆட்குறைப்பு
அடுத்தகட்டமாக அவர் ஆட்குறைப்பில் இறங்கினார். ட்விட்டர் நிறுவனத்தில் மொத்தம் 7500 ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில், அதில் 50% பேரை வேலையைவிட்டுத் தூக்க மஸ்க் முடிவு செய்துள்ளார்.இதற்கான நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இது தொடர்பான தகவல் மெயிலில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் ட்விட்டர் மார்க்கெட் பிரிவு முற்றிலுமாக நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜாக் டோர்சி
மஸ்கின் இந்த அடாவடி நடவடிக்கையால் உலகெங்கும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது மக்கள் செம கடுப்பில் உள்ளனர். இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி இது குறித்து சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். அவர் தனது ட்விட்டரில், "கடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி ட்விட்டரில் உள்ளவர்கள் வலிமையானவர்கள். எவ்வளவு கடினமான தருணத்திலும் அவர்கள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள்.

மன்னிப்பு
பலர் என் மீது கோபமாக இருப்பதை நான் உணர்கிறேன். இப்போது அனைவரும் இந்த சூழலில் இருக்க நானே காரணம் என்பதைப் பொறுப்பேற்கிறேன். மிகக் குறுகிய காலத்தில் நிறுவனத்தை வளர்க்க அதிக நபர்களை வேலைக்கு எடுத்தேன்.. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. ட்விட்டரில் இதுவரை பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் அனைவரும் என்னிடம் நிகழ்ச்சியாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை" என்று பதிவிட்டு உள்ளார்.

யார் இந்த ஜாக் டோர்சி
ஜாக் டோர்சி தனது நண்பர்களுடன் இணைந்து ட்விட்டர் தளத்தைக் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கினார். குறுகிய காலத்தில் ட்விட்டர் பெரியளவில் வளர்ச்சியடையவே கடந்த 2007 முதல் ட்விட்டரின் இயக்குநராக டோர்சி இருந்தார். மேலும், கடந்த 2015இல் அவர் ட்விட்டர் சிஇஓ பொறுப்பை ஏற்றார். இருப்பினும், முதலீட்டாளர்களுக்கும் அவருக்கும் இடையேயான அதிருப்தி அதிகரித்த நிலையில், கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மறைமுக பங்குதாரர்
மேலும், போர்ட் உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். அதேநேரம் ட்விட்டர் முதலீட்டாளர்கள் கைகளில் இருக்கக் கூடாது என்பதை அவர் உறுதியாகவே நம்பினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை அவர் ஊக்குவித்தார். இதற்கு நிதியுதவி கூட அளித்தார் என்றே சொல்லலாம். எலான் மஸ்கின் நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் இப்போதும் கூட டோர்சி ட்விட்டரின் மறைமுக பங்குதாரராகத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications