டிரம்ப்பை அலறவிட்ட மம்தானியால்.. எப்போதும் அமெரிக்க அதிபராகவே முடியாது! ஏன் தெரியுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அவரது வெற்றியைப் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள். இது மாபெரும் சாதனையாக இருந்தாலும் கூட மம்தானியால் அதிபர் தேர்தலில் போட்டியிடவே முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்!
அமெரிக்காவில் சமீபத்தில் பல்வேறு உட்கட்சி தேர்தல்கள் நடைபெற்றன. அதில் நேற்று முன்தினம் நடந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் சோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். 34 வயதான இவர், நியூயார்க்கின் மிகவும் இளம் வயது மேயர் ஆவார். மேலும், நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். மேலும், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மம்தானி
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி வெல்லவே கூடாது என்பதில் குடியரசு கட்சியினர் உறுதியாக இருந்தனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாகவே மம்தானியை எதிர்த்து வந்தார். மம்தானி வென்றால் நியூயார்க் நகருக்கான பெடரல் நிதியைக் கூட தர மாட்டேன் என மிரட்டினார். இருப்பினும், அதை எல்லாம் தாண்டி மம்தானி வென்றார்.
இது டிரம்ப்பிற்கான தோல்வியாகவும் பார்க்கப்படுகிறது. மம்தானி மேயர் தேர்தலில் வென்றது மாபெரும் சாதனை என்றாலும், அவரால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே உண்மை. டிரம்ப்பை அலறவிட்ட மம்தானியால் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபராகவே முடியாது.! அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்!
அமெரிக்க சட்டம்
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் II பிரிவு, 1வது பகுதி, 5வது உட்பிரிவின்படி, "ஒருவர் பிறப்பினால் அமெரிக்கக் குடிமகனாக அல்லது அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நேரத்தில் அமெரிக்கக் குடிமகனாக இருந்தவர் மட்டுமே அதிபர் பதவிக்குத் தகுதியானவர். மேலும், குறைந்தபட்சம் 35 வயதுக்கு குறைவானவர்கள், 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசிக்காதவர்கள் இப்பதவிக்குத் தகுதியற்றவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். அப்படி வெளிநாட்டில் பிறந்திருந்தால் அவர்கள் அமெரிக்கக் குடிமக்களின் குழந்தையாக இருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராகவும், அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்தவராகவும் இருக்க வேண்டியது அவசியம்!
யார் இந்த மம்தானி?
இருப்பினும், சோஹ்ரான் மம்தானி உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்தவர். அவர் பிறந்து சில ஆண்டுகளுக்கு பிறகே அவரது குடும்பத்தினர் அவரை அமெரிக்காவுக்கு அழைத்து வந்தனர். அவர் 2018ஆம் ஆண்டு தான் அமெரிக்கக் குடிமகனாக மாறினார். இதனால் அவர் பிறப்பின் அடிப்படையில் அமெரிக்கக் குடிமகன் என்ற நிபந்தனையை அவர் பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணமாகவே அவரால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
அவரது தந்தை, மஹ்மூத் மம்தானி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உகாண்டா அறிஞர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர். இவரது தாய், மீரா நாயர், 'மான்சூன் வெட்டிங்' மற்றும் 'தி நேம்சேக்' போன்ற புகழ்பெற்ற ஆவணப் படங்களுக்கு அறியப்பட்ட இந்திய-அமெரிக்க இயக்குநர் ஆவார். இதன் காரணமாகவே நியூயார்க் மேயர் தேர்தலில் வென்றாலும்.. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படாவிட்டால், அவரால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
சாதித்த மம்தானி
கடந்த ஆண்டு வரை மம்தானி பெரிய தலைவர் எல்லாம் இல்லை. அவருக்குப் பெரிதாக நிதி பலம் கூட இல்லை. பெரு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை வாங்காமல் அவர் மக்களிடம் இருந்தே நேரடியாகத் தனது பிரச்சாரத்திற்கு நன்கொடை வாங்கி வந்தார். மேலும், ஜனநாயகக் கட்சியிலும் அவருக்கு முழுமையான ஆதரவு இல்லாமல் இருந்தது. இருப்பினும், அதை எல்லாம் தாண்டி நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானி கலக்கல் வெற்றியைப் பெற்றார்.
தனது வெற்றி உரையில் மம்தானி, "நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். இந்த நகரம் குடியேறிகளால் கட்டப்பட்ட, குடியேறிகளால் உருவாக்கப்பட்ட நகரமாகும். இன்று முதல் ஒரு குடியேறியால் தெளிவாக வழிநடத்தப்படும் நகரமாக இது இருக்கும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications