டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு ஒன்னு பார்சல்.. என்னங்க நடக்குது? வெளியான ஷாக் தகவல்!
வாஷிங்டன்: தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வெளிப்படையாகவே பேசி வந்திருக்கிறார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் டிரம்ப் பெயரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் போர், சீனா, வடகொரியா மீது பொருளாதார தடைகள், இந்தியா மீதான பரஸ்பர வரி.. என சர்வதேச குழப்பத்திற்கு மொத்த காரணமே டிரம்ப்தான்! இப்படி இருக்கையில் இவரது பெயர் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திருக்கிறது.

நோபல் பரிசு
நோர்வே நோபல் கமிட்டியின் (Norwegian Nobel Committee) புதிய செயலாளரான கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென், இந்த ஆண்டு மொத்தம் 287 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதில் 208 தனிநபர்களும், 79 அமைப்புகளும் அடங்கும். டொனால்ட் டிரம்ப் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக கம்போடியா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் டிரம்பை இந்தப் பரிசுக்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் பெயர்
சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதற்கான டிரம்ப் பெரிய முயற்சி எடுத்திருக்கிறாராம். எனவே அவருடைய இராஜதந்திர நகர்வுகளை பாராட்டி (?) அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக நோபல் கமிட்டி யாரையும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் என்று அறிவிப்பதில்லை. பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்கள் 50 ஆண்டுகளுக்கு ரகசியமாக வைக்கப்படும். இருப்பினும், அவரைப் பரிந்துரை செய்த தலைவர்கள் அதனைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதால் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
யார் பரிந்துரைத்தது?
டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர்களை பார்ப்போம். மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம். எல்லைப் பாதுகாப்பு மற்றும் வட அமெரிக்கப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட டிரம்ப் எடுத்த முயற்சிகளுக்காக அவரைப் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, மத்திய கிழக்கில் ஆபிரகாம் உடன்படிக்கை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி முயற்சிகளைத் தொடங்கியதற்காக டிரம்பை மீண்டும் ஒருமுறை பரிந்துரைத்துள்ளார்.
எதற்காக பரிந்துரை?
இது தவிர, டிரம்பின் சொந்த கட்சி எம்பிக்கள், குறிப்பாக டிரம்பின் தீவிர ஆதரவாளர்கள், டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இந்த தகவல்களை பகிரங்கமாக சமூக வலைதளங்களிலும் செய்திக் குறிப்புகளிலும் வெளியிட்டனர்.
கம்போடியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் சில முக்கிய அரசியல் தலைவர்களும் டிரம்பின் உலகளாவிய இராஜதந்திர நகர்வுகளைப் பாராட்டி இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படியாக டிரம்ப் பெயர் நோபல் பரிசு பரிந்துரையாளர்களின் பட்டியலில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. லிஸ்ட்டில் டிரம்ப் பெயரை பார்த்த பலரும், கால கொடுமை இது! என தலையில் அடித்துக்கொண்டிருக்கின்றனர்.
வேறு யார் பெயர் இருக்கிறது?
டிரம்ப் தவிர, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் சில சர்வதேச அமைப்புகளும் இந்தப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெற்றியாளர் அக்டோபர் 9 அன்று அறிவிக்கப்படுவார். டிசம்பர் 10 அன்று ஒஸ்லோவில் (Oslo) விருது வழங்கும் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications