வெறும் 500 ரூபாய்தான் செலவு! எலக்ட்ரிக் விமானம் சோதனை வெற்றி.. தலைகீழாக போகும் விமான கட்டணங்கள்?
வாஷிங்டன்: முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் மிகப்பெரிய விமானத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று சோதித்து பார்த்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அரை மணி நேர பயணத்திற்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவானதாக விமானத்தை சோதித்து பார்த்த ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் விமானங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் வரும் காலத்தில் விமான கட்டணங்கள் எல்லாம் தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது.
ஒரு டீ குடிக்கும் செலவில் வரும் காலத்தில் விமான பயணம் சாத்தியம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஒரு சம்பவத்தை அமெரிக்க விமான நிறுவனம் ஒன்று சத்தமில்லாமல் செய்து முடித்துள்ளது.

1,100 அடி உயரத்தில் பறந்த எலக்ட்ரிக் விமானம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான நிறுவனமான ஹார்ட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம், முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய X1 என்ற விமானத்தை சோதித்து பார்த்துள்ளது. 27 நிமிடங்கள் இந்த விமானம், வானத்தில் பறந்த நிலையில், இதற்கான மின்சார செலவு வெறும் 5 டாலர் மட்டுமே ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக வெறும் ரூ.500 மட்டுமே ஆகும்.
டேக் ஆப் ஆனதில் இருந்து லேண்டிங் ஆகும் வரை முழுவதும் பேட்டரி பவரை பயன்படுத்தியே இந்த விமானம் சென்றுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கின் வடக்கு பகுதியில் உள்ள ஏர்போர்ட் ஒன்றில் இருந்து புறப்பட்டுள்ளது. சுமார் 1,100 அடி உயரத்தில் (335 மீட்டர்) பறந்த இந்த விமானத்தில் ஒரே ஒரு விமானி மட்டுமே பயணம் செய்துள்ளார். பயணிகள் யாரும் விமானத்தில் செல்லவில்லை.
சிறிய ரக வணிக விமானங்களின் அளவை கொண்ட இந்த விமானத்தின் எடை ஒரு பள்ளி செல்லும் பேருந்தின் எடைக்கு நிகரனதாக இருக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தின் இறக்கை அளவையும் சேர்த்து 106 அடி அகலமும், 76 அடி நீளம் கொண்ட பெரிய அளவிலான விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 ரூபாயில் டிக்கெட் சாத்தியமா?
இந்த விமானத்தை இயக்க வெறும் 500 ரூபாய்தான் மின்சாரம் செலவு ஆகியுள்ளது என்று விமான நிறுவனம் கூறினாலும், டிக்கெட் விலை அந்த அளவுக்கு நிர்ணயிக்கப்பட வாய்ப்பே இல்லை. ஏனெனில் 27 நிமிட பயணத்தின் எரிபொருள் செலவு மட்டும்தான் 500 ரூபாய். விமானம் கமர்ஷியல் ரீதியாக வந்தால், இயக்க செலவு, பைலட் சம்பளம், பராமரிப்பு, ஏர்போர்ட் கட்டணம், இன்சூரன்ஸ், மாற்று பேட்டரி என செலவுகள் கொஞ்சம் கூடும்.
எனவே 500 ரூபாயில் டிக்கெட்டை எதிர்பார்க்க முடியாது. எனினும், விமானங்களின் கட்டணம் பல ஆயிரங்களில் இருப்பது பெரிய அளவில் வரும் காலத்தில் குறைவதற்கான பாதையை ஏற்படுத்தியுள்ளது. ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரூஸ் போர்ஸ்லேண்ட் இது பற்றி கூறியதாவது:-
விமான கட்டணம் குறையும்
எலக்ட்ரிக் விமானங்கள், விமானங்களின் பொருளாதாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க போகிறது. விமான போக்குவரத்தின் செலவு கணிசமாக குறையும். 30 சீட்கள் கொண்ட ஹைப்ரிட் (மின்சாரம் மற்றும் விமான பெட்ரோல்) விமானத்தை இயக்குவதுதான் மிகப்பெரிய திட்டம் என்றும் 2031க்குள் இதனை சேவைக்கு கொண்டு வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இஎஸ் 30 என்ற விமானங்கள், விமானங்களின் போக்குவரத்து செலவை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. யுனைடெட், ஏர் கனடா மற்றும் ஜேஎஸ்எக்ஸ் உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்கள் ஏற்கனவே இந்த விமானத்தின் மீது ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாம். இதனால் வரும் காலத்தில் சீக்கிரமே எலக்ட்ரிக் பஸ்களை போல எலக்ட்ரிக் விமானங்களை வானில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
