நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக்கூடாதா?
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் அவர் பிறந்த நாளும் அவர் நடித்த படமும் ஒரே நாளில் வந்திருப்பது இதுதான் முதல் முறை. இந்த ஆண்டும் அவரது அரசியல் வருகை பற்றிய பேச்சு எழுந்து பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த முறை மத்தியில் பி.ஜே.பி. அரசு அமைந்திருப்பதும் நரேந்திர மோடியுடன் ரஜினிக்கு இருக்கும் நட்பும் கூடுதல் பலமாக சேர்ந்து கொண்டு ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சுக்கு வலு சேர்த்திருக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி தோல்வி என்பது ஒரு பக்கமிருந்தாலும், அவர் அரசியல் பிரவேசம் செய்தால் இப்போது அரசியல் சந்தையில் கடை போட்டிருக்கும் பல பழுத்த வியாபாரிகள் தங்கள் கடையை மூட்டை கட்ட வேண்டிய நிலை வரும் என்பதுதான் உண்மை.
ரஜினி எப்போது அரசியல் பற்றி பேசினாலும், யாரையாவது வைத்து அவருக்கு ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்துவார்கள். ‘உங்களி விட சீனியர் உங்கள் நண்பர் அரசியல்ல இருக்கார். அவரை எதிர்த்து எப்படி நீங்கள் அரசியல் செய்ய முடியும்' என்று ரஜினியின் காதில் போட்டு வைப்பார்கள். இன ரீதியாக அவரை தனிமைப்படுத்தும் முயற்சி இது. காரணம் ரஜினியிடம் நேரடியாக ‘நீ அரசியலுக்கு வந்தால் கர்நாடக முத்திரை குத்திவிடுவோம்'; என்று சொல்ல முடியாதல்லவா.
இப்படிதான் ஒவ்வொரு முறையும் ரஜினியை அடக்கி வைத்தார்கள், அரசியல்வாதிகளின் தூதுவர்களாக செயல்படும் வெள்ளித்திரை வியபாரிகள்.. லிங்கா படவிழாவிலும் இதுதான் நடந்தது.
கூட்டமே ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புக்கு ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்க, இடையில் பேச வந்த வைரமுத்து ‘ரஜினியை நீங்கள் கடவுள் என்கிறீர்கள், தேவதூதர் என்கிறீர்கள், வருங்கால முதல்வர் என்கிறீர்கள்.. ஆனால் தான் யார் என்பது ரஜினிக்குத் தெரியும்' என்று பேசுகிறார்.
இது ரஜினிக்கு மறமுகமாக விடப்பட்ட மிரட்டலாகவே அங்கிருந்த ரஜினி ரசிகர்கள் பார்த்தார்கள். ஆனால் ரஜினி பேசும்போது. "நான் அரசியலுக்கு வரணும்னு எல்லோரும் பேசுறீங்க. அது பிரச்சனையில்ல. அப்படி வந்து பலரையும் மிதித்து அந்த இடத்துக்குப் போயி உங்களுக்கு நல்லது செய்ய முடியுமான்னுதான் யோசிக்கிறேன்," என்று நீண்ட நாளைக்குப்பிறகு அரசியல் குறித்து கொஞ்சம் வெளிப்படையாகவே பேசினார்.
தன்னுடைய அரசியல் பிரவேசத்தால் அதிகம் பாதிக்க[ப்படப்போவது யார் என்பது ரஜினிக்கும் தெரியும். அதனாலும் அமைதி காத்தார். ரஜினி மீது அரசியல்வாதிகள் ஏவும் பிரமாஸ்திரமான கர்நாடக அம்பும் முறிந்து போய் பல நாட்களாகி விட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ரஜினி பிறந்தது தமிழகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கிருஷணகிரியில் இருக்கும் நாச்சிக்குப்பம் என்ற குக்கிராமம். இங்கு ரஜினியின் அம்மா, அப்பா வசித்த வீடும் ரஜினி பிறந்த வீடும் இப்போதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த வீட்டிற்குள் போனால் இப்போதும் குடும்ப உறுப்பினர்க்ளோடு ஒரு ஓரத்தில் சிவாஜி ராவாக ரஜினி நிற்கும் பழைய போட்டோவைப் பார்க்களாம்.
இந்த தமிழ் மண்ணில் பிறந்த தமிழன்தான் ரஜினி என்பதற்கு அந்த கிராமத்தில் நிறைய சாட்சிகள் இப்போது இருக்கிறது. ரஜினியின் உறவின் நினைவாக இன்றும் அந்த வீட்டில் அவரது தாய் வழி உறவினர்கள் வசித்து வருகிறார்கள். அதே கிராமத்திற்கு ரஜினி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் உயர்நிலை குடிநீர் தொட்டியும் கட்டிக்கொடுத்திருக்கிறார். மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு தனியாக தாகம் தீர்க்க வழி செய்திருக்கிறார். இன்னும் தன்னுடைய தாய் தந்தையர் நினைவாக திருமண மண்டபம் கட்ட ஆரம்ப கட்ட பணிகளையும் செய்து வைத்துள்ளார்.
காலம் யாரை எங்கு எப்போது கொண்டு வந்து நிறுத்தும் என்று சொல்ல முடியாது.
இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆரே நம் இதயத்தில் வாழும்போது தமிழ்நாட்டில் நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக்கூடாதா என்ன?
-தேனி கண்ணன்












Click it and Unblock the Notifications