சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு.. பெண் பக்தர் வாக்குவாதம்
சிதம்பரம்: கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பல நேரங்களில் தீட்சிதர்கள் அனுமதி வழங்குவதில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையான நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த ஜெயஷீலா என்பவர் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்றார். அப்போது கோயில் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தீட்சிதர்கள்
இதையடுத்து தீட்சிதர்களுடன் ஜெயஷீலா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பெண் அளித்த புகாரின் பேரில் கோயிலுக்கு வந்த காவல் துறையினர் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து மீண்டும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதி வழங்கினர்.

நடராஜர் திருக்கோயில்
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும் பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகார்கள்
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நிறைய பேர் வருகை தருகிறார்கள். இந்த கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருளியுள்ளார். இது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். இந்த கோயிலில் கனகசபை மண்டபத்தின் மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய முதலில் விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பொதுமக்களுக்கு அனுமதி
இதன் பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கனகசபை மண்டபத்தின் மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிதம்பரம் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு பக்தர்கள் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கனகசபை மீது ஏறலாம் என அரசு ஆணை பிறப்பித்தது.

தீட்சிதர்கள் அனுமதி இல்லை
ஆயினும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் விடுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதனை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்து கடலூர் இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications