Akhanda 2 OTT: ஓடிடிக்கு வந்த பாலையாவின் அகண்டா 2.. எதில் பார்க்கலாம்? சம்பவம் இருக்கு!
சென்னை: கடந்த மாதம் பாலகிருஷ்ணா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான "அகண்டா 2" திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பாகவே சில சிக்கல்களை சந்தித்து திரைக்கு வந்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த இமாலய வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் படம் வெளியாகியதும் விமர்சனங்கள் கலவையாக மாறின. பாலைய்யா ரசிகர்களுக்கு படம் கொண்டாட்டமாக இருந்தாலும், பொதுவான ரசிகர்களை பெரியளவில் கவரத் தவறியது.
2021-ல் வெளியான "அகண்டா" முதல் பாகம், பாலகிருஷ்ணாவின் இரட்டை வேடம், அதிரடி பில்ட்அப், பக்தி கலந்த ஆக்ஷன் ஆகியவற்றால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியின் அடிப்படையில்தான் "அகண்டா 2" உருவானது.

முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக, அதிக பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் வெளிநாட்டு வில்லன்கள், சீனா வரை விரியும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் இடம்பெற்றிருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை அளவில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இதன் விளைவாக, பாக்ஸ் ஆபீஸிலும் படக்குழுவினர் நினைத்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை. பெரிய ஓப்பனிங் இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் வசூல் சரிந்தது. இதனால் "அகண்டா 2" தியேட்டர் படம் என்பதை விட, ஓடிடி பார்வைக்கு ஏற்ற படம் என்ற பேச்சு அதிகரித்தது. தியேட்டரில் தவறிய ரசனை, வீட்டில் அமர்ந்து பார்ப்பதில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உருவானது.

இந்த நிலையில், "அகண்டா 2" ஓடிடி ரிலீஸ் குறித்த ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 9 முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலைய்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திரையரங்குகளில் கலவையான வரவேற்பை பெற்ற படம், ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாலகிருஷ்ணாவின் பவர் பில்ட்அப் காட்சிகள், பஞ்ச் டயலாக்கள் மற்றும் ஆக்ஷன் சீன்கள், பெரிய திரையை விட சிறிய திரையில் அதிகம் ரசிக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. தியேட்டரில் எழுந்த விமர்சனங்களுக்கு ஓடிடி தான் சரியான பதில் அளிக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் உள்ளது.

இதற்கிடையில், "ஜெயிலர் 2" படத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் திலீப்குமார் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அவர் நடித்தால் தெலுங்கு மார்க்கெட்டில் படம் பெரிய வரவேற்பு பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை பாலகிருஷ்ணா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில், "அகண்டா 2" திரைப்படம் தியேட்டரில் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றாவிட்டாலும், ஓடிடி தளத்தில் புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. திரையரங்கில் குறைந்த சத்தம் எழுந்தாலும், நெட்ஃபிளிக்ஸில் படம் எந்த அளவுக்கு ஓடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications