Kalamkaval OTT: மம்மூட்டி பலான வில்லனாக கலக்கிய களம் காவல் ஓடிடி ரிலீஸ்! எப்போது, எதில் பார்க்கலாம்?
சென்னை: மலையாள திரையுலகில் இந்த வருஷத்தின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக பேசப்பட்டு வரும் மம்மூட்டி - விநாயகன் நடிப்பில் உருவான 'களம்காவல்' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ள நிலையில், அதன் ஓடிடி வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜிதின் கே ஜோஸ் இயக்குநராக அறிமுகமான இப்படம், டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளியீட்டிற்கு முன்பே அதிகரித்தது.

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி
முதல் காட்சிகளுக்குப் பிறகு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள், 'களம்காவல்' படத்தை பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றிப் பாதையில் கொண்டு சென்றது. இதையடுத்து, திரையரங்குகளில் வெளியான 25-வது நாளில், படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல ஓடிடி தளமான Sony LIV மூலம் 'களம்காவல்' ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. ஜனவரி மாதத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், தகவல்களின்படி ஜனவரி 9ஆம் தேதி ஓடிடி ரிலீஸ் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விநாயகன் நாயகன், மம்மூட்டி வில்லன்
இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக, விநாயகன் - மம்மூட்டி இருவருக்கும் இடையிலான நடிப்பு மோதல் அமைந்துள்ளது. விநாயகன் ஒரு ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்க, மம்மூட்டி ஒரு சீரியல் கில்லர் வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருவரின் நடிப்பு மாற்றங்கள் தான் படத்தின் முக்கிய ஹைலைட்டாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
மம்மூட்டி கம்பெனி பேனரில், மம்மூட்டியே இப்படத்தை தயாரித்துள்ளார். இது அந்த பேனரில் உருவாகிய ஏழாவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வலுவான படம்
'களம்காவல்' படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். பின்னணி இசை படத்தின் திரில்லர் அனுபவத்தை இன்னும் தீவிரமாக மாற்றியுள்ளது. ஃபைசல் அலி ஒளிப்பதிவில், இருள், பதற்றம் மற்றும் விசாரணை சூழலை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
'குருப்' படத்திற்கு கதை எழுதிய ஜிதின் கே ஜோஸ், ஜிஷ்ணு ஸ்ரீகுமாருடன் இணைந்து இப்படத்திற்கான கதையை உருவாக்கியுள்ளார். இயக்குநராக முதல் படத்திலேயே, அவர் தனித்துவமான ஸ்டைலை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
மற்ற மொழி ரசிகர்களுக்கும் களம்காவல்
ஓடிடி வெளியீட்டின் மூலம், 'களம்காவல்' மலையாள ரசிகர்களைத் தாண்டி, தமிழ், இந்தி உள்ளிட்ட பிற மொழி பார்வையாளர்களையும் சென்றடைய உள்ளது. இதற்காக, படத்தின் இந்தி டீசரும் Sony LIV மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மம்மூட்டியின் முந்தைய ஓடிடி அனுபவம்
இந்த ஆண்டில் மம்மூட்டி நடித்த மற்றொரு படம் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. அந்த படம் ஜனவரியில் திரையரங்குகளில் வெளியானாலும், டிசம்பர் மாதத்தில்தான் ஓடிடி-யில் வெளியானது. இதனால், 'களம்காவல்' ஓடிடியில் வேகமாக ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
திரையரங்கு வெற்றிக்குப் பிறகு, ஓடிடி வழியாக இன்னும் அதிக ரசிகர்களை சென்றடைய தயாராக இருக்கும் 'களம்காவல்', மம்மூட்டியின் நடிப்புப் பயணத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க படமாக தொடர்ந்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications