LBW: விக்ராந்த் நடித்த எல்பிடபிள்யூ (Love Beyond Wicket)– வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
சென்னை: 90ஸ் காலத்தில் தொலைக்காட்சியில் சீரியல்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு, 'LBW: Love Beyond Wicket' ஒரு விதமான நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று வேகமாக ஓடும், உயர்தர தொழில்நுட்பத்துடன் வரும் வெப் சீரிஸ்களின் காலத்தில், இந்த சீரிஸ் பழைய டிவி சீரியல் சாயலோடு வருவது தான் இதன் முக்கிய தனித்துவம்.
இந்த சீரிஷ், நவீன வெப் சீரிஸாக இல்லாமல், ஒரு பழையகால கல்லூரி-கிரிக்கெட் டிவி சீரியல் போலவே நகர்கிறது. அதில் உள்ள குறைகள் கூட, ஒரு வகையான ஆறுதலை தருகின்றன. சற்று கனமான திரைக்கதை, பரிச்சயமான கதாபாத்திரங்கள், அடிக்கடி வரும் மோட்டிவேஷன் வசனங்கள் - இவை அனைத்தும் 90-களில் வளர்ந்தவர்களுக்கு ஒரு நினைவுப்பயணமாகவே தோன்றுகிறது.

கதையின் மையம்
'LBW' ஒரு புகழிழந்த கல்லூரி கிரிக்கெட் அகாடமியைச் சுற்றி நடக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த இளம் மாணவர்களை சுற்றி தான் இந்த சீரிஸின் கதை பயணிக்கிறது. இதில் இருக்கும் கேரக்டர்களை பற்றி பார்க்கும் போது, திறமையான ஆனால் குழப்பத்தில் இருக்கும் ஒரு இளைஞன், தந்தையின் புகழைத் தாண்டி தன்னை நிரூபிக்க நினைக்கும் ஒரு சூப்பர் ஸ்டாரின் மகன், குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண் வேகப்பந்து வீச்சாளர், உடற்பயிற்சியைவிட ஸ்நாக்ஸ் மீது அதிக இன்ட்ரஸ்ட் கொண்ட ரூம்மேட் - என வழக்கமான ஆனால் நெருக்கமான முகங்கள்.
இந்த அனைவரையும் இணைக்கும் கதாபாத்திரம் தான் ரங்கன் (விக்ராந்த்). ஒருகாலத்தில் நட்சத்திர பேட்ஸ்மனாக இருந்த அவர், தனது கோபக்குணம் காரணமாக வாழ்க்கையில் தோல்வியடைந்தவர். தற்போது 37 வயதில், தனது அத்தையுடன் வசித்து, திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் குடும்ப அழுத்தத்தையும், அகாடமியை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே கனவையும் சுமந்து செல்கிறார்.

நடிப்பும் கதாபாத்திரங்களும்
விக்ராந்த், இந்த கதாபாத்திரத்துக்கு தேவையான அமைதியான வேதனையையும், உள்ளுக்குள் எரியும் ஆசையையும் நன்றாக வெளிப்படுத்துகிறார். அவர் மைதானத்தின் ஓரத்தில் நின்று குறிப்பெடுக்கும் காட்சிகள், ஒரு பயிற்சியாளரை விட, ஒரு விமர்சகரைப் போலவே தோன்றினாலும், அந்த சீரியல் பாணி தான் இதன் அடையாளம்.
கல்லூரி முதல்வர் கதாபாத்திரமும் கவனிக்கத்தக்கது. தனிமையும் உறுதியும் கொண்ட ஒரு பெண்ணாக, அகாடமியின் மீட்பில் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கும் அவர், ரங்கனுடன் உருவாகும் உறவு எதிர்காலத்தில் முக்கிய திருப்பங்களை கொடுக்கக்கூடியது.
சீரிஸின் தன்மை
'LBW'யின் தொழில்நுட்ப தரம் இன்றைய தரத்திற்கு சற்று பழமையானது. டப்பிங், வசனங்கள், காட்சியமைப்பு - அனைத்தும் ஒரு தசாப்தம் பின்தங்கியதாகவே தோன்றலாம். ஆனால் அதுவே இந்த தொடரின் பலமாகவும் மாறுகிறது. இது ஒரு "கம்ஃபர்ட் வியூயிங்" சீரியஸ். அதிக சிந்தனை இல்லாமல், வாரம் வாரமாக சும்மா பார்த்து ரசிக்கக் கூடியது.
கிரிக்கெட், இங்கு ஒரு விளையாட்டாக மட்டுமல்ல; வளர்ச்சி, அடையாளம், காதல், எதிர்பார்ப்பு ஆகியவற்றை இணைக்கும் ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி வாழ்க்கை, இவர்களின் கனவுகளுக்கும் பயங்களுக்கும் மேடையாக அமைகிறது.

'LBW: Love Beyond Wicket' ஒரு பிரம்மாண்டமான, புதுமையான சீரிஸ் இல்ல. ஆனால், பழைய டிவி சீரியல்களின் சூழலை நினைவூட்டும், மெதுவான, இனிமையான அனுபவம். குறைகள் இருந்தாலும், அவற்றை மீறி பார்க்கத் தூண்டும் மனநிலையை உருவாக்குகிறது.
பெரிய திருப்பங்கள், அதிரடி திரைக்கதை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால் கிரிக்கெட், கல்லூரி வாழ்க்கை, பழைய சீரியல் சுவை ஆகியவற்றை விரும்புபவர்களுக்கு, 'LBW' ஒரு சுலபமான, மனதுக்கு நெருக்கமான தொடராக அமையும்.


Click it and Unblock the Notifications
