Youth OTT: ஓடிடியில் வெளியாகும் யூத் படம்! எப்போ, எதில் பார்க்கலாம்? கென் கருணாஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: தமிழ் திரையுலகில் புதிய தலைமுறை முயற்சியாக பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது யூத். நடிகரும் இயக்குநருமான கென் கருணாஸ் தனது முதல் இயக்க முயற்சியிலேயே கவனம் ஈர்த்திருக்கிறார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், தற்போது ஓடிடி வெளியீடு காரணமாக மீண்டும் பேசுபொருளாகி வருகிறது.

ஓடிடி ரிலீஸ் - எப்போது? எங்கே?
திரையரங்குகளில் மார்ச் 19ஆம் தேதி வெளியான "யூத்", தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இளமை காதல்
பள்ளி பருவத்தில் தொடங்கும் ஒரு சாதாரண காதல் பயணம் தான் இந்த படத்தின் மையம். கென் நடித்துள்ள கதாபாத்திரம், காதலை தேடி அலையும் இளைஞனாக வருகிறார். பள்ளியில் தொடங்கும் அந்த உணர்வு, கல்லூரி வரைக்கும் தொடர்கிறது.
ஒரு கட்டத்தில், மீனாட்சி என்ற பெண்ணுடன் அவருக்கு காதல் உருவாகிறது. ஆனால் சூழ்நிலைகளால் அவர்கள் பிரிகிறார்கள். அதற்கிடையில் மற்றொரு காதல் வருவது, அதனால் உருவாகும் குழப்பம், பின்னர் அதனால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் - இவை எல்லாம் தான் "யூத்" படத்தின் கரு.
இது ஒரு பெரிய ஹீரோயிசம் இல்லாத, ரியலிஸ்டிக் காதல் கதையாக அமைந்திருப்பது தான் இப்படத்தின் பலம் என்று சொல்லப்படுகிறது.

நடிப்பு & தொழில்நுட்பம்
இந்த படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தேவதர்ஷினி, அனிஷ்மா, மீனாட்சி தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குறிப்பாக, கென் கருணாஸ் தனது இயல்பான நடிப்பால் இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.
யூத் பட விமர்சனம்
"யூத்" படம் மாஸ் அம்சங்களை விட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இளமைக்கான குழப்பங்களும், காதலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஒரு தவறான முடிவின் விளைவுகள் ஒருவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள்.
இவை தான் நிஜ வாழ்க்கைக்கு அருகில் கொண்டு வந்திருக்கிறது. சில இடங்களில் கதை மெதுவாக செல்கிறது என்ற விமர்சனமும் இருந்தாலும், கிளைமாக்ஸ் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் பாராட்டைப் பெற்றுள்ளன.
வசூல் நிலவரம்
பெரிய ஸ்டார் படமல்லாதபோதிலும், "யூத்" படம் இதுவரை சுமார் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு டெப்யூ இயக்குநருக்கான நல்ல சாதனையாக பார்க்கப்படுகிறது. ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு இந்த படத்தின் ரீச் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் பார்க்கலாம்?
"யூத்" என்பது ஒரு சாதாரண காதல் படம் மட்டும் இல்லை. இன்றைய இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு முயற்சி. காதல், குழப்பம், முடிவுகள் - இந்த மூன்றையும் உண்மைக்கு நெருக்கமாக சொல்ல முயன்றிருக்கிறது. தியேட்டரில் மிஸ் செய்தவர்களுக்கு, ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications